மக்கள் எதிர்பார்க்கின்ற அமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்கான இது பொருத்தமான தருணம்- இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் புதிய அமைச்சர்கள் மத்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, April 18th, 2022

புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது தாம் மூத்த உறுப்பினர்களை கருத்திற் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிகள் வெறும் நன்மைகள் அல்ல, அது பெரிய பொறுப்பு என குறிப்பிட்ட அவர் அமைச்சர்கள் எவரும் மேலதிக வரப்பிரசாதங்களை பயன்படுத்த கூடாது என கேட்டுக்கொண்டார்.

அமைச்சரவைக்கு புதிதாக 17 அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது, உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரச நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் ஊழலை ஒழிப்பதற்கு வரப்பிரசாதங்களை எதிர்பார்க்காமல் செயற்படுமாறு அமைச்சரவை அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், பொதுமக்களின் கோரிக்கையான முறைமை மாற்றத்தை ஏற்படுத்த இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர்களிடம் கோரிய ஜனாதிபதி அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இளைஞர்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும் நேர்மையான, திறமையான, கறைபடியாத அரசாங்கத்தை இவர்களிடம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேசமயம் தங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஊழலில் இருந்து விடுவித்து, பொது மக்களுக்கு சேவை செய்ய உறுதிபூண்டவர்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் நிதி நெருக்கடியில் உள்ள பெரும்பாலான பொது நிறுவனங்கள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் அமைப்பில் மாற்றம் வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: