மக்கள், இராணுவத்தினர் அவதானம் – ஜப்பான் குழு எச்சரிக்கை! 

Sunday, April 23rd, 2017

மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் மீண்டும் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அங்கு ஆய்வு செய்த ஜப்பானிய நிபுணர் குழு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அங்கே இருப்பவர்களும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மற்றும், மீட்புக் குழுவினர் அவதானமாகச் செயற்படுமாறும் குறித்த குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 14ம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில், 32 பேர் வரை உயிரிழந்தனர், இந்நிலையில் குறித்த குப்பை மேடு தொடர்பில் ஆராய்வதற்காக ஜப்பானிலிருந்து 13பேர் அடங்கிய குழுவினர் வருகை தந்திருந்தனர்.இந்நிலையில் இன்றைய தினம் மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் குறித்த ஆய்வுக் குழுவினர் தமது பணிகளை மேற்கொண்டிருந்தனர். இதன் முடிவில் அவர்கள் கருத்து வெளியிடுகையில்,

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு இடம்பெற்ற பகுதிகளில் மீத்தேன் (விஷவாயு) வாயுவின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது. இந்த விஷவாயுத் தாக்கத்தினால் எந்நேரத்திலும் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே, அப்பகுதியில் இருப்பவர்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுங்கள். குறிப்பாக சிறிய அளவில் நெருப்பு பற்றக் கூடிய நிலையில் எந்தவொரு பொருளையும் அந்தப் பகுதியில் பாவிப்பது ஆபத்தான விடயம் என்றும் அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, ஜப்பான் விசேட குழுவின் அனர்த்த முகாமைத்துவத்துக்கான விசேட நிபுணர் குழு கருத்து தெரிவிக்கையில்,

மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கான காரணிகள் என்ன என்பது குறித்து தற்போது சேகரிக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் சகல துறைகள் தொடர்பாகவும் எமது குழுவினரால் ஆய்வு செய்யவுள்ளோம்.சேகரிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து முழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இவ்விடயம் தொடர்பிலான காரணத்தினை கண்டறிய முடியும்.

தற்போதைய நிலையில் இரசாயனக்கழிவுகள் மற்றும் மீத்தேன் வாயு போன்றவற்றை தவிர்ந்த ஏனைய காரணிகள் சீராக இருப்பதனால் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

இதற்கிடையில், மீதொட்டமுல்ல பகுதியில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் குப்பை மேட்டினது கீழ் பாகத்தினது இடது முனையில் ஒரு பகுதியிலிருந்து நீர் வெளியேறி வருகின்றமை குறித்து கண்டறியப்பட்டுள்ளது.எனவே குறித்த நீரை கால்வாயின் ஊடாக முறையாக வெளியேற்ற வேண்டிய தேவையுள்ளது. அதனை வெளியேற்றுவது தொடர்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

தவிர, சராசரியாக மீத்தேன் வாயுவின் அளவு 1.5 ஆக இருக்க வேண்டும். ஆனால் மீதொட்டமுல்லயில் அதிகளவில் மீத்தேனின் செறிவு காணப்படுகிறது. அந்தப் பகுதியில் மக்கள் பயன்படுத்திய மலசல கூடங்களில் இருந்து வெளியேறிய கழிவுகளும் இணைந்து அந்தப் பகுதியில் மீத்தேனின் செறிவு அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.எனவே மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் இப்பொழுது செறிவான மீத்தேன் அதாவது விஷவாயு இருப்பதன் விளைவாக, எந்நேரத்திலும் வெடிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.

இந்தப் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் மீட்புக் குழுவினர் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும். மீட்புக் குழுவினர் பயன்படுத்தும் இயந்திரங்களில் இருந்து வெளிவரும் வெப்பமான காற்று மற்றும் சூடான பொருட்களில் இருந்து வெளியேறும் வெப்பம் போன்றன வெடிப்பை ஏற்படுத்திவிடும்.

எனவே அந்தப் பகுதியில் நடமாடும் அனைவரும் அவதானமாகச் செயற்படவேண்டும். மேலும் ஆய்வுப் பணிகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: