மக்கள் அச்சம் கொள்ள தேவவையில்லை – தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு!

Tuesday, October 27th, 2020

எதிர்காலத்தில், நோய் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றுறுதியானவர்களை, வைத்தியசாலை அல்லாத சிகிச்சை மையங்களில் தடுத்து வைத்து, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் வீடுகளை அண்மித்தவாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுகின்றமை தொடர்பில், பொதுமக்கள் தேவையற்ற முறையில் அச்சம்கொள்ளத் தேவையில்லை என அந்தப் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீடுகளில் இருந்து தனிமைப்படுத்தலை மேற்கொள்ளும் முறைமை தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார். வீடுகள் தவிர்ந்த வேறு இடங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உள்ள நடைமுறை ரீதியான பிரச்சினைகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருவர் அல்லது ஒரு குடும்பம் வேறு ஒரு பகுதியில் தனிமைப்படுத்தப்படுகின்ற நிலையில், அவர்களது வீடு தொடர்பிலும், வீட்டிலுள்ள பிராணிகள் தொடர்பிலும் பல பிரச்சினைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளை கருத்திற் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.

இதற்கமைய, கொரோனா நோயாளர்களின் முதலாவது தொடர்பாளார்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, தங்களது வீட்டிலேயே பொது சுகாதார பரிசோதகர், அல்லது வைத்தியர்களின் ஊடாக அவர்களை தனிமைபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

தனிமைப்படுத்தப்படுகின்றவர்கள் தமது பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே தனிமைப்படுத்தல் நடவடிக்கையை வீடுகளிலேயே மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அயலில் உள்ளவர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது,

இதேவேளை, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற 14 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசாங்கத்தின் ஊடாக அவர்களுக்கு வழங்குவது தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரச்சினைகள் காணப்படுமாயின் அந்த பிரிவுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் அல்லது வைத்தியர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அதனை அறிவிக்க முடியும்.

எவ்வாறாயினும், வீட்டிலேயே தனிமைப்படுத்துவதன் மூலம் அயலில் உள்ளவர்களுக்கு அச்சுறுத்தல் காணப்படுமாயின், அவர்களை பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில் 7 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதற்கமைய இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் கைதானவர்களிக் எண்ணிக்கை ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளதுடன் 162 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: