மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார இலக்குகளை அடைவதற்கு அனைத்து சக்தியையும் அர்ப்பணிக்க தயார் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, June 24th, 2021

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் சுபீட்சமானதொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும், நாம் வாழும் பூமி, உயிரினங்கள் மற்றும் மரம் செடிகொடிகளை நேசிக்கும் பிரஜைகளினாலேயே சாத்தியம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜயபக்ச  அதற்காக, எனது அனைத்து சக்தியையும் அர்ப்பணிக்க தான் உறுதியாக உள்ள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக் கறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பொசன் நோன்மதி தினத்தில், புத்த பெருமானின் உயர்ந்த பண்புகளை நினைவுகூர்ந்து, மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு, மஹிந்த தேரருக்கு எங்கள் நன்றியைத் தெரிவிப்பது, பழங்காலத்திலிருந்தே நாம் மேற்கொண்டு வரும் வழக்கமாகும்.

மஹிந்த தேரரின் வருகையானது, இலங்கை வரலாற்றில் சமய ரீதியான ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. இதன் மூலம், சமூக, கலாசார மற்றும் அரசியல் ரீதியாக நாம் ஏராளமான நன்மைகளைப் பெற்றுள்ளோம்.

பரந்து விரிந்த முழு சுற்றுச்சூழலையும் கருணை உள்ளத்துடன் நோக்கிச் செயற்படுவதற்கு, மஹிந்த தேரரின் போதனைகள் பெரிதும் உதவின. “அட்டலோ தம்ம“ என்ற எட்டு உலக நியதிகளான வாழ்க்கையில் அடையும் இலாபம், நட்டம், புகழ்ச்சி, இகழ்ச்சி, அவமானம், பாராட்டு, இன்பம் மற்றும் துன்பத்தை, நம்பிக்கையுடன் பார்ப்பதற்கு எம்மை பழக்கப்படுத்தியதுடன், நல்ல வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையாகவும் இந்த சமயம் மாறியது என்பதையும் நாங்கள் அறிவோம்.

அரசனின் பத்துக் கடமைகளான “தசராஜ தர்மத்தை“ அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறை பற்றிய தனித்துவமான அணுகுமுறையுடன், ஒரு கீர்த்திமிக்க தேசமாக எமது நாட்டை நாம் உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். அந்த உன்னதமான கொள்கைகளை மதித்த, பண்டைய ஆட்சியாளர்கள் எமது நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் சென்றனர். ஒரு சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவாக அமைந்த பௌத்த போதனைகளையும் தசராஜ தர்மத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஆட்சி எண்ணக்கருவை, எமது ஆட்சி நிர்வாகத்திலும் ஒரு முன்னுதாரணமாகக் கொள்வோம்.

பண்டைய பாரம்பரியங்களுக்கு ஏற்ப, பொசன் பெரஹர, பந்தல்கள் அன்னதான நிகழ்வுகளை நடத்தி, மஹிந்த தேரரின் வருகையைக் கொண்டாடுவதற்கு தற்போதைய சூழல் எமக்கு இடந்தரவில்லை. இருப்பினும், தற்போதைய கொவிட் தொற்றுப் பரவல் நிலைமைகளில் இருந்து பாதுகாப்பாக சமய நெறிமுறைகளைப் பின்பற்றி, மஹிந்த தேரரை நினைவுகூர்வதற்கான ஒழுங்குகள் பற்றி, மகாசங்கத்தினர் எமக்கு வழிகாட்டியுள்ளனர். அந்த வழிகாட்டல்களில் கவனம் செலுத்தி, புத்த பெருமானின் போதனைகளின் படி எமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவதற்கு, இந்த பொசன் காலத்தில் நாம் உறுதிபூணுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: