மக்களை மீட்பதற்கான பொறிமுறை, போராட்டம் இல்லாத அரசியல் என்பனவே நாட்டுக்கு இன்று தேவையாக உள்ளது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்து!
Saturday, September 3rd, 2022வரிகளில் திருத்தம், வறுமை நிலையிலிருந்து மக்களை மீட்பதற்கான பொறிமுறை, போராட்டம் இல்லாத அரசியல் என்பனவே நாட்டுக்கு இன்று தேவையாக உள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அனைவரும் இணைந்து நெருக்கடியில் உள்ள நாட்டை மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் நெருக்கடி மிக்க காலகட்டத்தில் துணிச்சல் மிக்க தலைவராக சிறந்த வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு 1,600 பில்லியன் வருமானம் கிடைக்கும்போது 3,800 பில்லியன் செலவாக அமைந்துள்ள போதும் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலுடன் அவர் இந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் போன்று பொறுப்புக்களை தட்டிக் கழித்து ஆளுக்காள் குறை கூறுவது எந்த பலனையும் தராது. உண்மை நிலையை உணர்ந்து சகலரும் ஒன்றிணைந்து பொறுப்புக்களை பாரமெடுக்க வேண்டிய காலம் இது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் இத்தகைய சூழ்நிலையில் போராட்ட அரசியலை விடுத்து அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம். வெறுமனே பேசி அறிக்கைகளை விடுவதை விட பொறுப்புக்களை பாரமெடுத்து செய்வதே கடினமான விடயம். விமர்சனம் செய்பவர்கள் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த மே நான்காம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் நான் நாட்டின் நெருக்கடி நிலையை நாடாளுமன்றத்தில் அறிவித்தேன். அதன் பின்பே நாம் இந்தளவு முன் செல்ல முடிந்துள்ளது. தற்போது நாட்டில் எரிவாயு உள்ளது. நிலைமைகளை சரி செய்ய முடிந்துள்ளது. அதன் மூலம் எமது ரூபாவின் பெறுமதியை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் உதவி எமக்கு கிடைத்ததும் மேலும் அதனை கட்டுப்படுத்த முடியும்.
2021 ஆம் ஆண்டு எமது வருமானம் 1,600 பில்லியன் ஆகவும் செலவு 3,800 பில்லியனாகவும் இருந்துள்ளது. வரிவருமானம் குறைந்து, உல்லாசப் பிரயாணத்துறை வீழ்ச்சி கண்டு, ஏற்றுமதி வருமானம் குறைந்து, அந்நிய செலாவணி பெருமளவு குறைந்ததாலேயே அந்த நிலை ஏற்பட்டது. அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம்,சமுர்த்தி உதவி, உர மானியம் வழங்குவதற்கே எமது வருமானம் போதாமல் உள்ளது.
வறுமைக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. வறுமை நிலையை தொடர்ந்து பாதுகாக்க முடியாது. மீனுக்கு பதிலாக தூண்டில் வழங்கி வறுமை நிலையில் உள்ளவர்களை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|