மக்களை மந்தைகள் என்று நினைக்கிறதா கூட்டமைப்பு – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர்!

Monday, October 16th, 2017

தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றோம் என நன்கு அறிந்திருந்தும் அவர்களது பொறிக்குள் தொடர்ந்தும் வீழ்ந்து தமது எதிர்காலத்தை அழித்துக்கொண்டிருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை வெள்ளிடைமலையாக தெரிகின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் 2010ஆம் ஆண்டுமுதல் கிளிநொச்சி மாவட்டத்தில் எமது கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம். மக்களுக்கான எமது பணிகளுக்காக நாம் பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி சாதிக்கவேண்டிய கட்டாய நிலையிலும் இருக்கின்றோம்.

அதற்காகவேதான் இம்மாவட்டத்தின் கிராம மட்டங்களில் கட்சியின் ஊடாக செயற்பாட்டாளர்களை உள்வாங்கி அபிவிருத்தி உள்ளிட்ட செயற்றிட்டங்களை முன்னெடுக்க நாம் எண்ணியுள்ளோம்.

ஏனைய சக தமிழ் அரசியல் கட்சிகளைப்போன்று நாம் மக்களை ஏமாற்றி அதனூடாக எமது சுயலாப அரசியலை முன்னெடுக்க நாம் ஒருபோதும் விரும்பியது கிடையாது.

மாறாக, எத்தனை இடர்கள் வந்தாலும் அவற்றை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுடன் சாதனைகளாக்கவே நாம் விரும்புகின்றோம். நிச்சயம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலை நம்பி எமக்கு அரசியல்பலத்தை தரும் மக்களின் வாழ்க்கையை நாம் நிச்சயமாக மேம்படுத்துவோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன், வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளர் லிங்கேஸ், முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ் (கிருபன்) யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்

Related posts: