மக்களே தீர்மானிக்கவேண்டும்- வடக்கின் ஆளுநர் குரே!

Sunday, January 1st, 2017

இனங்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் யார் விவாதித்தாலும் பாரளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்தாலும் அதிகாரப்பகிர்வு அவசியமா என்பது தொடர்பில் மக்களே இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் வடக்கில் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் அவர்களின் நகர்வுகளும் பூரண ஜனநாயகத்தை வெளிக்காட்டி நிற்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் வடமாகாண ஆளுநரின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

யார் எவ்வாறான இனவாத கருத்துக்களை முன்வைத்தாலும் அல்லது ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் இலங்கை ஜனநாயக நாடு என்பதில் மாற்றம் இல்லை. ஜனநாயக நாடாக இருந்தாலும் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்ற வகையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

அவ்வாறு இருக்கையில் இப்போது அதிகாரப் பகிர்வு என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நாட்கணக்கில் கலந்தாலோசித்தாலும் அல்லது புத்திஜீவிகளுடன் விவாதம் செய்தாலும் இறுதியில் இந்த விடயம் மக்களினால் தீர்மானிக்கப்பட வேண்டும்.

அரசியல் அமைப்பில் பாரதூரமான மாற்றங்களை கொண்டு வரும் போது பராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிடின் எந்த சட்டமூலமும் நிறைவேற்றப்பட முடியாது.

ஆகவே பிரிவினைவாத கருத்துக்களை முவைத்து அரசியல் சாதகங்களை அடைய நினைப்பது பாரளுமன்றத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு கருத்தாகவே கருதப்பட வேண்டும். அரசியல் மட்டத்திலோ அல்லது பிரிவினைவாத மட்டத்திலோ கருத்துக்களை முன்வைத்த போதிலும் தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

நிலப்பரப்பு சார்ந்தும் மக்கள் சார்ந்தும் ஐக்கியத்தை உருவாக்கும் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். மாறாக எவரதும் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு இடமளிக்க கூடாது. ஆனால் அதிகாரப் பகிர்வு அவசியமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். நாட்டில் சகல பகுதிகளிலும் பிரச்சினைகள் உள்ளன.

வடக்கிலும் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன.தெற்கிலும் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. ஆயினும் வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இனவாத ரீதியிலோ அல்லது பிரிவினைவாத அடிப்படையிலோ அவதானிக்கக் கூடாது.

சிங்கள மக்களுக்கு பிரச்சினைகள் என்றவுடன் தேசிய பிரச்சினையாக விமர்சிக்கும் அதே நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினையை இனவாத ரீதியில் எவரும் கருதக் கூடாது. உண்மையில் யுத்தத்தின் பின்னர் வடக்கில் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் அவர்களின் நகர்வுகளும் பூரண ஜனநாயகத்தை வெளிப்படுத்தியுள்ளன.

அரசியல் வாதிகள் எந்த கருத்துக்களை முன்வைத்தாலும் மக்கள் நாட்டில் அமைதியை விரும்பும் வகையிலும் சிங்கள மக்களை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் நடந்து கொள்கின்றனர். இராணுவ ஆக்கிரமிப்பு அல்லது வடக்கில் சிங்கள அடக்குமுறை என்ற கருத்துக்களையும் முன்வைக்க முடியாது.

யுத்தத்தின் பின்னர் ஒரு சில காலம் அடக்குமுறைகள் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலைமைகள் இல்லை. ஆகவே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சரியாக பயன்படுத்திக்கொண்டு நாட்டில் ஜனநாயகத்தை ஸ்திரமாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தீர்வுகளை பெற்றுத் தருகின்றோம். பிரச்சினைகளை தீர்க்க மாற்று நடவடிக்கைகளை கையாள்கின்றோம் என்று கூறிக்கொண்டு நாட்டில் புதிய குழப்பங்களை ஏற்படுத்திவிடக் கூடாது என்றார்.

fd81e537fe0750b1f258a09c5079ac4a_L

Related posts: