மக்களே இந்த நாட்டின் உரிமையாளர்கள் – இந்தியாவுடன் எமக்கு திருட்டுக் கூட்டில்லை – பெப்ரவரி 8 இல் ஒப்பந்தம் சபையில் பகிரங்கப்படுத்தப்படும் – அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!

Friday, January 21st, 2022

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி சபையில் பகிரங்கப்படுத்தப்படுமென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத் தில் உரையாற்றுகையிலேயே இதனை அறிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேலும் கூறுகையில் –

இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா தொற்று காரணம் அல்ல, 1955 ஆம் ஆண்டில் இருந்து கடன்களைப் பெற்று வருமானத்தை விடவும் அதிகமாக செலவுகளைச் செய்த அரசுகளே காரணம்.

அதற்கான விளைவுகளையே இன்று நாம் அனுபவித்து வருகின்றோம். கடன் பலூன் நன்றாக ஊதி எந்த வேளையிலும் வெடிக்கத் தயாராகவே இருந்தது. அதனை கொரோனா வைரஸ் வேகப்படுத்தியது. அவ்வளவுதான்.

ஆகவே இன்றய இந்தப் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு இதுவரை காலமாக ஆட்சி செய்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக் கூறியாக வேண்டும். இப்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியாது. நாம் இன்று நெருக்கடியில் உள்ளோம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும், உண்மை கசப்பாக இருந்தாலும் அதனை எம்மால் நிராகரிக்க முடியாது.

இந்த நாட்டின் உரிமையாளர்கள் மக்களே! எனவே அவர்களுக்கு உண்மையைக் கூறியாக வேண்டும். அதுமட்டுமல்ல நெருக்கடியில் இருந்து மீளும் தேசிய வேலைத்திட்டத்தை உடனடியாக முன்வைக்க வேண்டும். மக்களுக்கு இருட்டில் இருக்க முடியாது. வெளிச்சத்தை நோக்கி மக்கள் பயணிக்கவே எப்போதும் விரும்புவார்கள். எனவே இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த நெருக்கடி இருக்கும் எவ்வளவு காலத்தில் இதிலிருந்து எம்மால் மீள முடியும் என்ற வேலைத் திட்டத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இதேவேளை திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் குறித்து இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை திருட்டுத்தனமானதென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் குற்றம் சுமத்தினர். ஆனால் இந்த உடன்படிக்கையைச் செய்துகொள்ள முன்னர் மூன்று தடவைகள் சகல கட்சிகளின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினேன். அதுமட்டுமல்ல அமைச்சரவைக்கு தெரியப்படுத்தினேன், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் தெளிவுபடுத்தினேன். கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனியார் தொலைக் காட்சியில் விவாதித்தேன். இதன்போது சகல கேள்விகளுக்கும் நான் தெளிவாக பதில் தெரிவித்துள்ளேன். ஊடகங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளேன்.

இப்போது இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை திருட்டுத்தனமானதல்ல. அதனை இந்தச் சபையில் பகிரங்கப்படுத்த நான் தயார். எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி உடன்படிக்கையை சபைப்படுத்துவேன். தெளிவான முறையில் செய்துகொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை போன்று வேறு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: