மக்களுக்கான செயற்றிட்டங்களை தமது தனிப்பட்ட செயற்பாடாக யாரும் உரிமை கோர முடியாது – ஈ.பி.டி.பியின் யாழ். மாநகர உறுப்பினர் றெமீடியஸ்!

Monday, May 28th, 2018

யாழ் மாநகர சபையால் செயற்படுத்தப்படுகின்ற மக்களுக்கான செயற்றிட்டங்களை யாரும் தமது தனிப்பட்ட செயற்பாடாக உரிமைகோர முடியாது. அவ்வாறு செயற்படும் போக்கை சில உறுப்பினர்கள் கொண்டுள்ளமையானது ஏனைய சபை உறுப்பினர்களை அவமதிப்பதுடன் அவர்களை பாரபட்சம் காட்டுவதாகவுமே அமைகின்றது.

இத்தகைய மனப்பாங்குடன் செயற்படுவதை உடன் நிறுத்தி அனைத்து உறுப்பினர்களுக்குமான சம கௌரவத்தையும் அவர்கள் மக்களுக்கு செய்யும் பங்களிப்பையும் கொடுப்பதை உறுதிசெய்யவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையின் சிறப்பு அமர்வு இன்று காலை 9.00 மணிக்கு சபை முதல்வர் ஆனோல்ட் தலைமையில் நடைபெற்றது.இதன்போது வீதி மின்விளக்கு பொருத்தல் தொடர்பில் நடைபெற்ற விவாதத்தின் போதே குறித்த கருத்தை  அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த மாநகரசபையானது அனைத்து உறுப்பினர்களுக்கும் சம கௌரவத்தை வழங்கும் நிலையை உறுதி செய்யவேண்டும். மக்கள் நலன்சார்ந்து இந்தச் சபையால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளிலும் அனைத்து சபை உறுப்பினர்களுக்கும் பங்களிப்பு வழங்கப்பட வேண்டும்.

ஆனாலும் சில குழுக்கள் தமது போக்கில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.  சில குழுக்களின் தலைமை பொறுப்பாளர்கள் தமக்கு பிடித்தமான சில உறுப்பினர்களது விருப்பிற்கேற்ப மின்குமிழ்களை பகிர்வதையும் அவற்றை பொருத்துவதையும்  அவதானிக்க முடிகின்றது.

இதனால் அனைத்து உறுப்பினர்களுக்கும் சம அளவில் மின்குமிழ்கள் பகிரப்பட்டு அந்தந்த உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் அவை மக்களிடம் கொண்டுசெல்லப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

மாறாக தன்னிச்சைப் போக்காக நடந்துகொண்டு ஒரு சில தரப்பினர் மட்டும் உரிமை கொண்டாடுவதற்கான போக்கை கொண்டு செல்வதால் உறுப்பினர்களின் மக்கள் பணிக்கான உரிமை மறுக்கப்படுவதாகவே பார்க்க முடிகின்றது. எனவே உறுப்பினர்களுக்கு அவர்களின் பணிகளில் பாகுபாடு காட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: