மக்களின் வலிகளை தெரியாதவர்கள் தமிழர் அரசியல் தலைமையாக உருவாக்கப்படுவதே அடாவடித்தன அரசியல் வளரக் காரணம் – ஊடகவியலாளர் வித்தியாதரன் காட்டம்!

Wednesday, May 30th, 2018

போராட்டம் நடந்த காலப்பகுதியில் இந்த மண்ணையும் மக்களையும் விட்டு வேறு தேசங்களுக்கு ஓடியவர்களும் இந்த மண்ணில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் எதுவும் தெரியாதவர்களும் இன்று எமது தேசத்தின் அரசியல் தலைவர்களாக உருவாக்கப்படுவதே எமது மக்கள் இன்றுவரை அவலங்களையும் துயரங்களையும் சுமந்து வாழும் நிலை தொடர்வதற்கு காரணம் என மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

DD தொலைக்காட்சி சேவையின் மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

அண்மையில் நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கறுப்பு உடை அணிந்து அடாவடித்தனமான முறையில் அரசியல் தலைவர்களையும் மண்ணுக்காக போராடியவர்களையும் ஓரங்கட்டியவர்கள் யார்? அவ்வாறு அவர்கள் நடந்துகொண்டதற்கு அங்கிகாரம் கொடுத்தது யார்? இதன் உண்மைத்தன்மையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை வெளிப்படுத்தாதுள்ளதானது அவர்களது இயலாமையா அல்லது அடாவடித்தனம் கொண்ட அராயக வழிமுறை ஜனநாயகத்துக்கு மீண்டும் ஆதரவு தெரிவிக்கின்றனரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பது ஒரு அரசியல் சார்பற்ற நிகழ்வு. ஆனாலும் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற போர்வையில் கறுப்பு உடையில் இருந்தவர்கள் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களை புறக்கணித்ததுடன் அந்த நிகழ்வை நடத்தவேண்டிய முன்னாள் போராளிகளையும் துரத்தி அடாவடித்தனம் செய்வதானது மீண்டும் எமது மக்களை கடந்தகாலத்திற்கு இட்டுச் செல்லும் அபாயகரமான நிலையை உணர்த்துவதாகவே உள்ளது.

கடைசிவரை வடக்கு மாகாணசபையே இந்த நிகழ்வை நடத்தும் என்றும் அதற்கான நிதிப்பங்களிப்புகளை கூட மாகாணசபை செய்திருந்த நிலையில் இந்த நிகழ்வு திடீரென பின்புலம் தெரியாதவர்கள் நடத்தியமையானது முதலமைச்சர் அந்த கூட்டத்தினருக்கு சரணாகதியாகிவிட்டதாகவே கருத முடிகின்றது.

இதனால் தான் முன்னாள் போராளியை அந்த கறுப்பு உடை தரித்தவர்கள் துரத்தும் போதும் அதை தடுக்கமுடியாதவகையில் வேடிக்கை பார்த்துள்ளார் என தெரிகின்றது.

உண்மையில் முதலமைச்சர் இந்த கறுப்பு உடை தரித்தவர்களது அடாவடித்தனத்திற்கு உடந்தையாக இருக்காதிருந்திருந்தால் குறித்த நிகழ்வு நிறைவடைந்த பின்னர் அது தொடர்பில் உண்மைநிலைகளை வெளிப்படுத்தியிருக்கவேண்டும்.

ஆனாலும் அவர் அவ்வாறு செயற்படாது மௌனித்துள்ளதானது அவர் தனது குறுகிய அரசியல் போக்கை காட்டுவதாக உள்ளது என்றும் தெரிவித்த ஊடகவியலாளர் வித்தியாதரன் இந்த மண்ணையும் மக்களையும் விட்டு வேறு தேசங்களுக்கு ஓடியவர்களும் இந்த மண்ணில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் எதுவும் தெரியாதவர்களும் இன்று எமது தேசத்தின் அரசியல் தலைவர்களாக உருவாக்கப்படுவதே இந்த அவலங்களுக்கு காரணம் என  அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: