மக்களால் எனக்கு வழங்கப்பட்டுள்ள 60 மாதகால வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வேன் – ஜனாதிபதி உறுதி!

Monday, March 22nd, 2021

நாட்டு மக்களால் எனக்கு வழங்கப்பட்ட 60 மாத கால வேலைத் திட்டங்களை  முதலில் செய்ய வேண்டும். பின்னர் மீதமுள்ளவற்றைப் பற்றி சிந்திக்கலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இந்த 60 மாதங்களில் எங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்வதே எனது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

வலப்பனையில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித் திட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி கோட்டபஜ ராஜபக்ச இவ்வாறு தேரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி –

வறுமை ஒழிப்பு என்பது நாம் முன்வைத்துள்ள கொள்கைத் திட்டத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. அதனடிப்படையில் வறிய நிலையில் உள்ள கிராமங்களின் வருமான அளவை உயர்த்துவதே எமது அடிப்படைக் கொள்கையாக உள்ளது.

எமது மக்களில் சுமார் 75 வீதமானோர் கிராமப்புறங்களில்தான் வாழ்கின்றனர். அவர்களில் சுமார் 35 வீதமானோர் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனடிப்படையில்தான் அவற்றின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு நான் மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்குச் சென்று “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தை முன்னெடுத்து வருகிறேன்.

எல்லா காலங்களிலும் நகரங்களில் மட்டும் வேலை செய்ய முடியாது. பெரும்பாலானவர்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். அங்கிருந்துதான் நெல் வருகிறது. காய்கறிகள் வருகின்றன. இவை எல்லாம் கிராமத்திலேயே நடக்கின்றன. அதனால்தான் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க நாம் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.

கிராம மக்கள் வேறு எதனையும் கேட்பதில்லை. தங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருமாறே கேட்கின்றனர்.

இன்று பலர் நாம் சுற்றாடலை அழிவுக்குள்ளாக்குவதாக எம்மை தூற்றுகின்றனர். நாங்கள் சுற்றாடலை மிகவும் நேசிக்கிறோம்.

நான் ஒருபோதும் சுற்றாடலை அழித்ததில்லை. கிராமத்தில் உள்ள மக்கள் சுற்றாடலை அழிப்பதில்லை. அவர்கள் சுற்றாடலோடு மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய போலி குற்றச்சாட்டுக்களை முன்வைப்போரையும் இந்த அமைப்புக்களையும் பார்க்கிலும் எனக்கு சுற்றாடல் பற்றிய கரிசனை உள்ளது. கடந்த காலத்தில் கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளையும் பசுமை நகரமாக மாற்றியமைத்தவன் நான்.

ஒரு கிராமத்திற்கு வீதி தேவை என்றால் அந்த வீதியை அமைத்துக்கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபோது கிராமிய மக்கள் எப்படி வாழ்வது.

தற்போது வனப்பாதுகாப்பு திணைக்களம் உள்ளது. வன சீவராசிகள் திணைக்களம் உள்ளது, சுற்றாடல் அமைச்சு உள்ளது. இந்த அனைத்து நிறுவனங்களும் மக்கள் வாழ்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவேயன்றி அவர்களுக்கு கஷ்டங்களை கொடுப்பதற்காகவல்ல.

பிழையான விடயங்கள் இடம்பெறுமானால் அதனை நிறுத்த வேண்டும். நாம் காடுகளை பாதுகாக்க வேண்டும். ஆறுகளை பாதுகாக்க வேண்டும். மக்களும் வாழ வேண்டும்.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மக்களிடம் செல்லும்போது அவர்கள் இத்தகைய பிரச்சினைகளை முன்வைக்கின்றபோது எதுவுமே கேட்காததுபோல் இருக்கவா சொல்கின்றீர்கள். அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும். தீர்வுகளை வழங்க வேண்டும். அதிகாரிகள் வகை சொல்ல வேண்டும். அதுபற்றி கண்டறிந்து அவ்வாறு நடந்திருக்குமேயானால் அதனை சரி செய்து கொடுக்க வேண்டும்.

உங்களுக்குத் தெரியும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தீவிரவாதத்தை முற்றாக அழித்து இந்நாட்டில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளும்போது 2015ல் பொய்யான பிரச்சாரங்களை கூறி மக்களை ஏமாற்றி அந்த அரசாங்கத்தை வீழ்த்தினர்.

அதற்கு பின்னர் என்ன நடந்தது. இராணுவ வீரர்கள் சிறைக்கு சென்றனர். பௌத்த பிக்குமார் சிறைபடுத்தப்பட்டனர். நாட்டில் அன்று இருந்த அரசாங்கம் எமது இராணுவத்தினருக்கு எதிராகவே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

000

Related posts: