ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 30 பேருக்கு கொரோனா – அரசாங்க தகவல் திணைக்களம் தகவல்!

Saturday, October 10th, 2020

நாட்டில் நேற்றைய தினம் 35 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 30 பேருக்கு தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேரும், அந்த தொழிற்சாலையில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்து மேலும் 24 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது.

அத்துடன், வேறு தொடர்புடைய 3 பேருக்கும் தொற்றுறுதியான நிலையில், அவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் முன்னதாக ஆயிரத்து 53 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகி இருந்தது. இந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 83 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 5 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது. இந்திய கடற்படையினர் 2 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 2 பேரும், குவைத்தில் இருந்து வந்த ஒருவரும் இந்த எண்ணிக்கையில் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய, இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 523 ஆக உயர்வடைந்துள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பினர்.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 பரவல் காரணமாக குவைத்தில் உள்ள இலங்கை தூதுரகம் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை தங்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: