போராட்டம் வெடிக்கும் என்று கூறி கூறி தமிழ் இனத்தின் கட்டமைப்பை கூட்டமைப்பினர் வெடிக்கச் செய்திருக்கின்றார்கள் – டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதி வழங்கியபடி மயிலிட்டி பிரதேசம் விடுவிக்கப்பட வேண்டும்.இல்லாது விட்டால் போராட்டம் வெடிக்கும் என்று மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார்.
போராட்டம் வெடிக்கும் என்று இவரே வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1976ஆம் ஆண்டிலிருந்து கூறிவருகின்றார்.
இப்படி உசுப்பேற்றும் வசனம் பேசுவது அவருக்கு பழகிவிட்டது. வாய்ப்பாடு போல இதையே அடிக்கடி கூறுவதையிட்டு அவர் வெட்கப்படவோ, கூச்சப்படவோ இல்லை.
”போராட்டம் வெடிக்கும், போராட்டம் வெடிக்கும்’ என்று கூறியே தமிழ் இனத்தின் கட்டமைப்பை இவரும், இவர் சார்ந்த கூட்டமைப்பினரும் வெடிக்கச் செய்திருக்கின்றார்கள், தமிழ் இனத்தின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் வெடித்துச் சிதறடித்தும் விட்டிருக்கின்றார்கள், இந்த சூழ்ச்சிக்குள் தமிழ் மக்களை தள்ளிவிட்டு அழியச் செய்திருக்கின்றார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது பதிவில் தெரிவித்திருப்பதாவது –
இதற்குப் பின்னரும் எவற்றை வெடிக்கச் செய்வதற்காக மாவை சேனாதிராசா போராட்டம் வெடிக்கும் என்று கூறுகின்றார். இவர் இப்படிக் கூறுவது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது குடும்பத்தினருக்கே ஏற்புடையதாக இருக்காது.
இவர் தமிழ் மக்களிடம் பொய்யையும், தன்னால் இயலாததையும் கூறிக் கொண்டிருக்கின்றார் என்பது அவரது குடும்பத்துக்கு நன்றாகவே தெரியும்.
இவரால் போராட முடியுமாக இருந்தால் முதலில் தனது பிள்ளைகளை முன்னுதாரணமாக களத்தில் இறக்கி போராட்டத்தை ஆரம்பிக்கும் திராணியை மாவை சேனாதிராசா பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதற்கமைவாக என்று கூறியிருக்கின்றார். அப்படியானால் அரசாங்கத்தோடு எப்போது கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள் என்பதையும், அந்தப் பேச்சுவார்த்தைகளில்; மயிலிட்டி விடுவிப்பு உட்பட வேறு என்னென்ன விடயங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்பதையும், அதில் எவற்றை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருக்கின்றது என்பதையும் தமிழ் மக்களிடம் வெளிப்படையாக மாவை சேனாதிராசா கூறுவாரா?
ஏன் என்றால் கூட்டமைப்பு ஜனாதிபதியுடனோ, பிரதமரிடமோ தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை. கூட்டமைப்பின் எந்தக் கோரிக்கையையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு வாக்குறுதி வழங்கவும் இல்லை.
கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி எதிர்க்கட்சித் தலைமைப் பதவியும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் பதவியும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்களின் இணைத்தலைமைப் பதவிகளையும், அதிசொகுசு வாகனங்களையுமே பெற்றுக் கொண்டது என்பதே உண்மையாகும்.
Related posts:
|
|