போராட்டங்கள் மூலம் பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது – அரசுடன் பேசியே பெற்றுக் கொடுக்க முடியும் – யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, January 29th, 2022

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது. காணாமலாக்கப்பட்டோர் தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தபின்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

காணாமலாக்கப்பட்டோர் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றையதினம் யாழ்ப்பாணத்திலும் எமது நிகழ்வு நடக்கும் இடத்திற்கு முன்பும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

நேற்றையதினம் நான் முல்லைத்தீவில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோதும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை நான் சந்திக்க அழைத்தேன் ஆனால் அவர்கள் சந்திக்க விரும்பவில்லை என்று கூறினார்கள்.

எனவே அதிலிருந்து ஒன்றை நான் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அவர்கள் போராட்டம் செய்யவே வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பிரச்சனைக்குரிய தீர்வு தேவையில்லை. அவர்களுக்கு போராட்டத்தின் மூலம்  தீர்வு  கிடைக்காது.

கடந்த 13 வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு அவர்களுக்கு என்ன தான் கிடைத்தது. போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் எதையும் அவர்கள் பெற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது தானே? அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த காணாமலாக்கப்பட்டோருக்கான பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

இதேநேரம் நான் ஒன்றை கூறிவைக்க விரும்புகின்றேன். நீதி அமைச்சர் என்ற ரீதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமானால் அது அரசுடன் பேசித்தான் அதற்குரிய தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர போராட்டங்களை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாது.

அதேநேரம் போராட்டங்களை மேற்கொள்வது அவர்களுடைய ஜனநாயக உரிமை. அதனை மதிக்கின்றேன். அதனை தடுக்க மாட்டேன். ஆனால் போராட்டங்களை நடத்தி எதனையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

படைப்புழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளது சோள உற்பத்தியை விவசாயிகள் மீண்டும் ஆரம்பிக்கலாம் - விவசாய திணைக்கள...
நாட்டின் எதிர்கால சொத்தான சிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு - சிறுவர் தின வாழ்த்...
பிரச்சினைகளை தீர்ப்பதல்ல பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குவதே அரசியல்வாதிகளின் பொறுப்பு - அமைச்சர் ட...