போதைப்பொருள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் மட்டுமே பாடசாலை மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் – பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்து!
Friday, December 30th, 2022போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதகடிப்படையில் போதைப்பொருள் தொடர்பான சரிபார்க்கப்பட்ட தகவல்கள் கிடைத்தால் மாத்திரமே சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தகவல்களைப் பெறாமல் பாடசாலைகளில் சோதனைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
சில பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களால் போதைப்பொருள்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலையடுத்து, அண்மைய வாரங்களாக பாடசாலைகளை அண்டிய பகுதிகளிலும், சில சந்தர்ப்பங்களில் பாடசாலைகளுக்குள்ளும் சோதனைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, சில குழுக்கள் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போன்ற போதைப்பொருட்களைப் பரப்புவதற்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
இதேநேரம் பாடசாலை மாணவர்களை வீண் சோதனை செய்வதை தவிர்க்குமாறும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், வீதிகளில் பாடசாலை மாணவர்களை சோதனையிடுவதையும், காணொளி பதிவு செய்வதையும் தவிர்க்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|