போட்டிக்கு ஓடும் பஸ் சாரதிகளை கைது செய்ய உத்தரவு!

Tuesday, March 15th, 2016

யாழ்ப்பாணத்தில் வீதிகளில் போட்டிபோட்டு ஓடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கைது செய்து சட்டநடவடிக்கைக்கு உட்படுத்துமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பேருந்துகள் போட்டிபோட்டு ஓடுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு போட்டிபோட்டு ஓடுபவர்களைக் கைது செய்வதுடன், பஸ்களையும் கைப்பற்றவும்,  பஸ்களில் பயணிக்கும் பயணிகளை வேறு பஸ்களில் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்யவேண்டும்.

விபத்து ஏற்பட்ட பின்னர் பொலிஸாரும் நீதிபதியும் அந்த இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்துவதை விட விபத்து நடைபெற முன்னர் அதனைத் தடுக்கவேண்டும். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் சிறிது காலத்துக்கு பிணை இல்லாமல் விளக்கமறியலில் வைக்கப்படவேண்டும். அப்போதுதான் போட்டிபோட்டு ஓடுபவர்கள் திருந்துவார்கள்.

யாழ்ப்பாணத்தில் 75 வீதமான குற்றங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 25 வீதமான குற்றங்கள் நடக்கின்றன. அவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும். பொலிஸார் பொலிஸ் நிலையங்களில் இருக்காமல், வீதிக்கு இறங்கி குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: