போக்குவர்த்து சபையைக் கட்டியெழுப்ப விசேட வேலைத்திடம் – அமைச்சர் மஹிந்த அமரவீர!
Tuesday, January 14th, 2020இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாக போக்குவரத்துச் சேவை முகாமைத்துவ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, 500 பேருந்துகளை விரைவாக கொள்வனவு செய்வதற்கு கடந்த வாரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த பேருந்துகளில் 400 பஸ்கள் 36 தொடக்கம் 56 வரையான ஆசனங்களைக் கொண்டது. ஏனைய 100 பஸ்கள் 26 ஆசனங்களைக் கொண்டதாகும்.
இதேபோன்று, நகரப் பிரதேசங்களில் வீதிகள் காப்பெட் இடப்பட்டு செப்பனிட்டுள்ளதனால், இந்த வருட இறுதியளவில் மேலும் 2 ஆயிரம் பஸ்களை இலங்கை போக்குவரத்துச் சபை பெற்றுக் கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருட இறுதியளவில், இலங்கை போக்குவரத்துச் சபை புதிதாக 2500 பஸ்களை சேவையில் இணைத்துக் கொள்வதே இதன் இலக்காகும். இலங்கை போக்குவரத்துச் சபையிடம் தற்போது 6 ஆயிரம் பேருந்து உண்டு. இவற்றுள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தக்கூடிய நிலையில் உள்ள பேருந்துகள் 2000 ஆகும்.
மீதொட்ட பேருந்து டிப்போவுக்கு அமைச்சர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது 75 பேருந்துகளைக் கொண்ட இந்த டிப்போ சேவையை மேற்கொள்ளக்கூடியநிலையில் 50 பேருந்து மாத்திரமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்களின் பற்றாக்குறை காரணமாக, ஒரு நாளில் 29 தொடக்கம் 30 பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடிகிறது.
சாரதிகளுக்கும், நடத்துனர்களுக்கும் பதவி உயர்வுகளைப் போன்று, இடமாற்றங்களும் வழங்கப்பட்டதனால், பேருந்து சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, மீண்டும் அறிவிக்கும் வரையில் சாரதிகளின் இடமாற்றம் தற்காலிமாக இடைநிறுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை போக்குவரத்துச் சபைத் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related posts:
|
|