போக்குவரத்து சீரின்மை – கால தாமதமாக வருகை தரும் மாணவருக்கு சலுகை வழங்க வேண்டும் – அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சர் அறிவுறுத்து!

Thursday, June 9th, 2022

போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமையால் பாடசாலைக்கு தாமதமாக வரும் மாணவர்கள் தொடர்பில் சலுகைகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாமதமாகி பாடசாலைகளுக்கு சமுகமளிக்கும்போதும் மாணவர்களின் சீருடை பிரச்சினை மற்றும் காலணிகளை அணியாதபோது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் அது தொடர்பான சுற்றறிக்கை ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூலவிடைக்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி எம்.பி. துஷார இந்துனில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே  அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

மேலும் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் இதனால் பாதிப்படையும் வகையில் செயற்பட முடியாது. இதுதொடர்பாக நாம் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடளாவிய ரீதியாக உள்ள மாகாண பாடசாலைகளில் 8,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் 22, 000 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அரசாங்கத்திற்கு இணைத்து கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: