பொலனறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உள்பட 22 பேர் தொழு நோயுடன் அடையாளம் – சுகாதார திணைக்களத்தின் தகவல்!

Tuesday, September 5th, 2023

பொலனறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 22 பேர் தொழு நோயினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் புதிதாக கண்டறியப்பட்ட 22 தொழு நோயாளிகளும், கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட மூன்று நோயாளிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமன்கடுவ பிரதேசத்தில் 5 பேரும், மித்ரிகிரிய பிரதேசத்தில் 3 பேரும், லங்காபுர பிரதேசத்தில் 3 பேரும், வெலிகந்த பிரதேசத்தில் 4 பேரும், ஹிகுரக்கொட பிரதேசத்தில் 2 பேரும், அரலகங்வில பிரதேசத்தில் 5 பேரும், சிறிபுர பிரதேசத்தில் 3 பேரும் பதிவாகியுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இந்த நோயாளிகளில் 15 வயதுக்குட்பட்ட ஐந்து நோயாளிகள் உள்ளனர். நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டபிள்யூ.கே.டபிள்யூ.எஸ். குமாரவன்ச தெரிவித்துள்ளார்.

தற்போது தொழுநோயாளர்கள் பொலனறுவை, மெதிரிகிரிய மற்றும் ஹிகுராக்கொட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வருடம் அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் மற்றும் கடந்த வருடங்களில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் உட்பட பொலனறுவை வைத்தியசாலையில் 40 நோயாளர்கள், மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் 12 நோயாளர்கள் மற்றும் ஹிகுராக்கொட வைத்தியசாலையில் 4 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தோலில் வெளிர் நிற புள்ளிகள், அந்த இடங்களில் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை புகைப்படம் எடுத்து 0754088604 அல்லது 0754434085 என்ற இலக்கங்களுக்கு வாட்ஸ்அப் செய்தி மூலம் அனுப்பி, அவர்களுக்கு இந்நோய் ஏற்பட்டுள்ளதா என்பதை தாங்களாகவே அறிந்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இல்லை என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை பெறும்படி சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந் நோய் தொடர்பில் அச்சம் தேவையில்லை எனவும், சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்த முடியும் எனவும் பொலனறுவை தொற்று நோய் நிபுணர் வைத்தியர் பீ.ஜி. ஒபாஷா எம்.ஐ. சந்திரசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: