பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கே பாதீட்டில் முன்னுரிமை – பசில் ராஜபக்ச!

Saturday, December 19th, 2020

கொரோனா நிலைமை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 2021 வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பாதையை தீர்மானிக்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிராமத்திற்கு அவ்வாறான ஒரு திட்டத்தையேனும் செயற்படுத்துவது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ, “கிராமப்புற தேவைகளுக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது இருந்த பொருளாதார நிலை போன்றே, கொவிட் தொற்று நிலை காரணமாக முகங்கொடுக்க நேரிட்ட நிதி நெருக்கடிகள் தொடர்பிலும் நீங்கள் அறிவீர்கள்.

இன்று சுற்றுலாத்துறை வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டில் தொழில் புரிபவர்களிடமிருந்து மாத்திரமே வெளிநாட்டு பணம் எமக்கு கிடைத்தது. நவம்பர் மாதமளவில் அதில் 34 வீத வளர்ச்சி ஏற்பட்டது.

எதிர்காலத்தில் புதிய சந்தை வாய்ப்புகளை இணங்காண்பது போன்றே திறமையான தொழிலாளர்களுக்கு அந்த வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம். வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் கடன்களை வழங்கும் பல நாடுகள் இன்று கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமையால் வெளிநாட்டு நன்கொடைகளும் கிடைப்பதில்லை. அதேவேளை அரசாங்கத்தின் கடன் பெறும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதத்தில் பில்லியன் டொலர் பெறுமதிக்கும் அதிகமான ஏற்றுமதி வருவாயை ஈட்ட முடிந்தது. இதனால் நம் நாட்டிற்கான எரிபொருள் மற்றும் ஒளடத இறக்குமதிக்கு தடை ஏற்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையிலேயே 2021 வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கிராமப்புற அபிவிருத்தி அடையாளம் காணப்பட்டுள்ளன.  நவீன உலகிற்கு பொருந்தும் வகையில் கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தி கிராமப்புற பாடசாலைகளின் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம் நாடு செல்லும் பாதையை தீர்மானிக்கும் வரவு செலவுத் திட்டமாகும். நீங்கள், நாம் அனைவரும் ஒன்றிணைந்து சரியான தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் சுபீட்சமான நாட்டை உருவாக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: