பொருத்து வீட்டை தடுக்கக் கோரி உயர்நீதிமன்றம் சென்றது கூட்டமைப்பு !

Thursday, July 13th, 2017

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருத்து வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

சாதாரண மழைக்கு கூட ஒதுங்கிக்கொள்ளும் வகையிலான இருப்பிடங்களற்று பல ஆயிரம் குடும்பங்கள் பரிதவித்திருந்த மக்கள் குறித்த பொருத்து வீடுகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த வீடுகளை மக்களுக்கு வழங்கக் கூடாது என்ற தமது நிலைப்பாட்டுக்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களின் காலநிலைக்கு பொருத்தமற்றவை  இந்த வீடுகள் என சுட்டிக்காட்டி அந்த வீடுகளை கட்ட அனுமதிக்க கூடாது என நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தமையானது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஓலைக் குடிசைகளில் தான் வாழவேண்டும் என்று தமிழ்தேசியக் கூடடமைப்பு முடிவெடுத்துள்ளதாக புத்திஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இந்தப் பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் காலநிலைக்கு பொருத்தமற்றவை எனப் பல தரப்பினர்கள் சுட்டிக்காட்டிய போதும் பொருத்து வீடுகள் அமைப்பதில் மீள்குடியேற்ற அமைச்சர் விடாப்பிடியாக உள்ள நிலையில் தடை உத்தரவு கோரும் இந்த மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பொருத்து வீடுகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதனிடையே பல தாசாப்தங்களாக தாம் ஓலைக் குடிசைகளிலும் தறப்பாள் கொட்டகைகளிலும் வாழ்ந்தவருவதால் தமது வாழ்வியல் முறையில் சிறிதளவேனும் ஒரு மாறுதலை இந்த வீடு உருவாக்கிதரும் என வடபகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்ததுடன் அந்த வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதற்கான முன்னகர்வுகள் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் நடைபெற்று மக்கள் தமக்கு வீடுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நேரத்தில் சுமந்திரன் எம்.பி யின் இந்த நடவடிக்கை மக்களை கவலையடையச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த இலகு வீட்டுத்திட்டத்தை பொதுமக்களிடம் திணிக்காது மக்களின் விருப்பத்திற்கிணங்க மக்களின் விருப்புக்கமைய  வழங்கவேண்டும் என டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: