பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பில் இதுவரை இறுதியான முடிவு எடுக்க்ப்படவில்லை : யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன்

Friday, April 22nd, 2016

வடக்கு,கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 65  ஆயிரம் பொருத்துவீடுகள் தொடர்பில் இதுவரை இறுதியான முடிவு மாவட்டச் செயலகம் ரீதியாக எடுக்கப்படவில்லை என  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்  நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளிகளின் கருத்துக்களின் படி தாம் கல்வீடுகளையே விரும்புவதாகவும், அவ்வாறில்லாத பட்சத்தில் இவ்வாறான பொருத்து வீடுகளாவது அமைத்துத் தரப்பட வேண்டுமென மக்கள் தெரிவித்ததாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

யாழ் .மாவட்டச்  செயலகத்தில் நேற்றுமுன்தினம்  (20} இடம்பெற்ற வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பாக  ஊடகவியாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக  சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்  தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் வீடுகள் தேவையானவர்களுக்கு  வீடுகளைப்  பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை  மாவட்ட செயலகத்தின் ஊடாகப் பெற்று  மீள்குடியேற்ற அமைச்சுக்கு அனுப்பி வருகிறோம்.

முதற்கட்டமாக மீள்குடியேற்ற அமைச்சினால்  மூவாயிரம் கல்வீடுகள் கட்டுவதற்கான அனுமதிகள்  மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன . இதற்காக எட்டு இலட்சம் ரூபா செலவில் இவ் வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன

மேலதிகமாக 39 ஆயிரம் பேர்களுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அதற்கான அனுமதிக்கடிதங்கள் மீள்குடியேற்ற அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளன . மீள் குடியேற்ற அமைச்சினால்  மூவாயிரம் கல்வீடுகள் அமைக்கப்படுவதற்கு எட்டு இலட்சம் ரூபா வீதம் எங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது.

மீள்குடியேற்ற அமைச்சின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ள படிவங்களுக்கு அமைவாக இவ் வீட்டுத்திட்டப்  பயனாளிகள் உள்வாங்கப்படவுள்ளனர். இதில் புதிதாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களான  தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவு, கோப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவில் வளலாய், சாவகச்சேரிப் பிரதேச செயலர் பிரிவில் எழுதுமட்டுவாள், கரம்பான், நாகர் கோயிலை அண்டிய பகுதிகள் , மணியம் தோட்டம், அரியாலை,சங்கானை ,பொன்னாலை,மாதகல் ஆகிய அண்மையில் மீள் குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. மேலும் தேவையான வீடுகள் நிறையக் காணப்படுகின்றன.

மூவாயிரம் கல்வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை அடுத்த மாதமளவில்  ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்

Related posts: