பொப்பிசை பாடகர் மனோகரனின் இழப்பு தமிழ்க் கலையுலகிற்கு பேரிழப்பு – டக்ளஸ் தேவானந்தா இரங்கல்

Tuesday, January 23rd, 2018

இலங்கையின் பிரபல பொப்பிசைப் பாடகர் ஏ.ஈ மனோகரனின் இழப்பு கலை உலகத்திற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சிறிது காலம் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 73 ஆவது வயதில் நேற்றையதினம் சென்னையில் காலமானர்.

பொப்பிசைச் சக்கரவர்த்தி என போற்றப்பட்ட இவர் பல மொழிகளில் பாடல்கள் பாடுவதில் திறமை வாய்ந்தவராக திகழ்ந்தார். இவர் பாடிய “சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே …” “யாழ்ப்பாணம் போக ரெடியா” , “சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா…” போன்ற பொப்பிசை பாடல்கள் இலங்கையில் மட்டுமல்லாது உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது.

சிலோன் மனோகர் என்று தென்னிந்தியாவில் அறியப்பட்ட இவர், புகழ்பெற்ற பொப் இசைப் பாடகராக மட்டுமல்லாது, திரைப்பட நடிகராகவும் வலம் வந்தவராவார். தமிழ்,சிங்களம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும், நாடகத் தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகர் கமல ஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ என்ற தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தும் பாடியும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இலங்கை கலைஞர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து கலை உலகக்கு நம்பிக்கையை உருவாக்கிய இவரது இழப்பு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்லாது கலை உலகில் உள்ள அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

அந்த வகையில் அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருடனும் கலை உலகத்தினருடனும் நாமும் எமது துயரை பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்

Related posts: