பொன்னாலைச் சந்தியில் கட்டி முடிக்காத வீடு ஒன்றைப் பறித்தது பிரதேச செயலகம் -மேலும் பல வீடுகளைப் பறிக்கவும் திட்டம்!

Saturday, January 19th, 2019

பொன்னாலைச் சந்தி மூளாயில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் இதுவரை வீடுகளைக் கட்டி முடிக்காத பயனாளிகளின் வீடுகளைப் பறிமுதல் செய்ய சங்கானைப் பிரதேச செயலகம் முடிவு செய்துள்ளது. இதுவரை வீடு கட்டி முடிக்காத பயனாளி ஒருவருடைய வீடு பறிமுதல் செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பொன்னாலை, மூளாய் குடியேற்றத்திட்டம் 1980 ஆண்டுகளில் 65 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. 1980ஆண்டு காலப்பகுதியில் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை அந்த காணிகளிலேயே மக்கள் வாழ்ந்து வந்தனர். 1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக அங்கிருந்த மக்களும் இடம்பெயர்ந்து சென்றனர். அவர்களது வீடுகள் உடைக்கப்பட்டன. பின்னர் சமாதான காலத்தின் போது மீண்டும் அந்தக் காணி உரிமையாளர்களுக்கு அரசால் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

அதன் பின்னர் ஏற்பட்ட இறுதிக்கட்ட போரினாலும் இராணுவ ஆக்கிரமிப்பாலும் அங்கு மக்கள் வாழ முடியாது மீண்டும் இடம்பெயர்ந்தனர். கடந்த பல வருடங்களாக அவர்கள் திக்குத் திக்காகச் சென்று குடியமர்ந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அந்தக் காணிகளுக்கான வீட்டுத் திட்டங்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்டன. சொந்த வீடுகள் இன்றி இருக்கும் காணிக்குரியவர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் ஆகின்றபோதும் கட்டப்பட்ட வீடுகள் மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவில்லை.

இந்த நிலையிலேயே வீடுகளைக் கட்டி முடிக்காத பயனாளிகளின் வீடுகளைப் பறிமுதல் செய்வதற்கு பிரதேச செயலகம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கடிதங்கள் கட்டிமுடிக்கப்படாத, கட்டப்பட்ட வீடுகளில் குடியமராத பயனாளிகளுக்கு பிரதேச செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வீடுகள் வழங்கப்பட்டு நீண்டகாலமாகியும் பல வீடுகள் இதுவரை முழுமைப்படுத்தப்படவில்லை. முழுமைப்படுத்தாத வீடுகளின் பயனாளிகளுக்கு ஏற்கனவே கால அவகாசங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்டவர்களுக்கு மீண்டும் கால அவகாசத்தை வழங்கி அதன் பின்னரும் வீடுகள் முடிவுறுத்தப்படாது விட்டால் அந்த வீடுகளைப் பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடுகள் அற்ற பலர் பிரதேசத்தில் உள்ளனர். அவர்களுக்கு அந்த வீடுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீட்டுத் திட்டத்தில் குடியமராத குடும்பங்களுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவருடைய வீடு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் வேலைகள் இதுவரை முடிவுறுத்தப்படவில்லை.

Related posts: