பொது தேர்தலே ஒரேவழி – பிரதமர் மஹிந்த !

Monday, December 3rd, 2018

ஜனநாயகம் அஸ்தமனமாகியுள்ள நாட்டை மீண்டும் ஸ்திரத்தன்மையாக்குவதற்கு பொதுத் தேர்தலே ஒரே வழியாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் சட்டங்களுக்கு அமைய ஜனாதிபதி, 2018 நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில், திகதி காலவரை என்பன குறிப்பிடப்பட்டிருந்தன.

இதற்கமைய செயற்பாடுகள் இடம்பெற்றால், மிகவும் குறுகிய காலத்தில் நாடு ஸ்திரதன்மை அடையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதலாவது நாடாளுமன்றம் தொடக்கம் அரசியல் ஸ்திரமற்றதன்மை ஏற்பட்ட போது, பொது தேர்தல்களே நடத்தப்பட்டன.

உலகில் நாடாளுமன்ற ஆட்சிமுறையுள்ள நாடுகளில் கூட அரச தலைவர் தமது எண்ணத்தினதும் மதிப்பீட்டினதும் அடிப்படையில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற நிலை உள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அமைப்பின் 19வது திருத்த சட்டத்தின் பின்னர் 33(2) ஏ பிரிவில் நாடாளுமன்ற சம்பிரதாயம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

அந்த சரத்தை தவிர்த்து 19 வது திருத்த சட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட 70(1)ஆம் அத்தியாயத்தை மாத்திரம் ஏற்றுக் கொண்டால் எந்த காரணத்திற்காகவும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்ற முடிவுக்கே வரமுடியும்.

19வது திருத்த சட்டத்தில் 33(2) ஏ என்ற அத்தியாயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதும், ஜனாதிபதிக்கு அவ்வாறானதொரு அதிகாரம் இல்லை என கூறமுடியுமா? என மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts: