பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என்ற தீர்மானத்திற்கு விசேட வைத்தியர்கள் சங்கம் கண்டனம்!

Wednesday, April 20th, 2022

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அந்த சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில் வெளிஇடங்களில் இடம்பெறும் கூட்டங்களிலும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் உள்ளக நிகழ்வுகளில் தொடர்ந்தும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சமூகத்தில் பரவும் கொவிட் – 19 இன் பாதிப்பு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வருவதனால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும், குழந்தைகளையும் பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களில் பங்கேற்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்று குழந்தைகள் நல மருத்துவ ஆலோசகர், வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொவிட் வைரசு தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து காணப்படுவதால், பெற்றோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும். பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வைத்தியர் பெரேரா கூறினார்.

பொரளை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் தற்போது சுமார் 10 குழந்தைகள் கொவிட்-19 நோய்க்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் – 19 தொற்று நாட்டில் இருந்து வருகிறது. கொவிட்-19 தொற்று குறித்து தற்போது பலர் மறந்துவிட்டனர். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்படாததால், பெற்றோர் மற்றும் பெரியவர்களின் கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற நடத்தை காரணமாக அவர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறார்கள் என்றும் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: