பொதுப் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத்திட்டம் விடையளித்துள்ளது – மக்களுடன் நேரடியாக தொடர்புடைய கல்விக்கும் சுகாதாரத்திற்கும் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது – அமைச்சர்கள் புகழாரம்!

Saturday, November 13th, 2021

2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நாட்டின் முக்கியமான துறையும் மக்களோடு நேரடியாக தொடர்புபடும் துறையுமான சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் நேற்றையதினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். –

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சுகாதாரத்துறையை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் சம்பந்தமாக முன்னெடுக்க வேண்டிய அனைத்து செயற்பாடுகள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தொடக்கம் நடுத்தர மற்றும் மத்தியதர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னொருபோதும் இல்லாத வகையில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை மேம்பாட்டுக்காக பாரியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு துறைகளும் நாட்டில் தற்போது மிக முக்கியமான துறைகளாக பார்க்கப்படும் துறைகளாகும். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்யக்கூடியதும் நேரடியாக மக்களோடு சம்பந்தப்படும் இரண்டு துறைகளாக இவை உள்ளன.

இந்தத் துறைகள் தொடர்பான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதற்கான  தேவைகள் மேலும் அதிகரிக்குமானால் நாம் திருத்தங்களை மேற்கொண்டு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் எனவும் அவர் மேலும் தெரிவிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடு எதிர்நோக்கும் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் விடைகளை வழங்கியுள்ளதாக ஆளும்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல, எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வரி விதிப்பதற்கு இந்த வரவு செலவு திட்டம் கவனம் செலுத்தியுள்ளது என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேநேரம் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட்டால் கடன் சுமையிலிருந்து நாட்டைக் காப்பாற்றி பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

மேலும் வெற்றிகரமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தமைக்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பாராட்டுகளை தெரிவிதுள்ளார்.

Related posts: