பேராதனை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம் – மருந்துகளுக்கான தேவைகளை கண்டறியுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரிக்கை!

Tuesday, March 29th, 2022

பேராதனை வைத்தியசாலையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்படுவதாக பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன முன்னதாக தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் இன்று (29) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு மருத்துவ விநியோகப் பிரிவு உறுதியளித்துள்ளது.

எனவே நாளாந்த சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் இந்தியாவினால் எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் ஆராயுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பேராதனை போதனா வைத்தியசாலையில் வழமையான சத்திர சிகிச்சைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட தீர்மானம் மீளப்பெற்றுள்ள நிலையில், குறித்த சத்திர சிகிச்சைகளைத் தொடர்வதற்கான மருந்துகளுக்கான தேவைகளை கண்டறியுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது.

அதற்கமைய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் மருத்துவ பீட பீடாதிபதியுமான பேராசிரியர் எம்.டி லமாவன்சவை,தொடர்பு கொண்டு, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், வழமையான மற்றும் திட்டமிடப்பட்ட சத்திர சிகிச்சைகளைத் தொடர்வதற்கான மருந்துகளுக்கான தேவைகளை கண்டறியுமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: