பெருமளவு நகை பணம் வட்டுக்கோட்டையில் திருட்டு!

Tuesday, July 31st, 2018

வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்தவேளை வீட்டுக்குள் புகுந்த திருட்டுக் கும்பல் சுமார் 20 பவுண் தங்க நகைகளையும் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றது என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளவத்தைப் பகுதியிலுள்ள வீட்டில் நேற்றுக்காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் இந்தத் திருட்டு இடம்பெற்றது.

இந்த வீட்டில் கூட்டுக் குடும்பமாக 3 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தில் ஒருவர் சந்தைக்குச் சென்றுள்ளார். ஏனையோர் வேலைக்குச் சென்று விட்டனர்.

வீட்டில் எவரும் இல்லாதவேளை பார்த்து அங்கு புகுந்த கும்பல் அங்கிருந்து நகை, பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுள்ளது. சந்தைக்குச் சென்றவர் வீடு வந்து பார்த்தபோதே வீடுடைத்து திருடப்பட்டிருந்தமை தெரியவந்தது.

உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். திருடப்பட்ட நகைகளின் தொகை சரியாக மதிப்பிடப்படவில்லையென தெரிவிக்கப்பட்டது. எனினும் சுமார் 20 பவுண் நகை திருடப்பட்டிருக்கலாம் என்று விசாரணைகளில் தெரியவருகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட வீட்டின் சில பகுதிகளில் இருந்து 2 தாலிக்கொடிகள் உள்ளிட்ட 48 பவுண் நகைகள் மீட்கப்பட்டன. பெருமளவு நகைகள் இருப்பதை அறிந்து திட்டமிட்டே திருட்டு நடந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிளவத்தைப் பகுதியில் தொடர்ச்சியாகத் திருட்டுச் சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. திருடப்படும் நகைகள், பணம் என்பன பொலிஸாரால் மீட்கப்படுகின்ற போதும் அவை உரிமையாளர்களிடம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளன.

Related posts: