பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரச அனுசரணைகளுடன் இரண்டுவகை வீட்டுத்திட்டங்களை அமைக்கும் பிரதமர் மஹிந்தவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 26th, 2021

பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தினது பாதுகாப்பான வாழ்விடத்தை உரித்தாக்குவதற்காக தோட்ட வீடமைப்பு முறைமையை மறுசீரமைப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

தோட்ட தொழிலாளர்களுக்கு லயன் அறைகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தோட்ட வீடமைப்பு முறைமை 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பல்வேறு பொறிமுறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கத்தின் அனுசரணையுடன் 7 பேர்ச்சர்ஸ் காணி உறுதியுடன் கூடிய 550 சதுர அடிகளைக் கொண்ட வீடமைப்பு மற்றும் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் ஒத்துழைப்புக்களுடன் 550 சதுர அடிகளைக் கொண்ட 2 வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த முன்மொழிவுத் திட்ட முறைமையின் கீழ் வீடுகளை வழங்கும் போது பின்பற்றுகின்ற நடைமுறைகள் மாறுபடுகின்றமையால் ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளன.

இந்நிலையிலேயே பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் போது பொதுவான ஒரு பொறிமுறையைப் பின்பற்றுவதற்கும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அதனடிப்படையில் தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் போது பொதுவான ஒரு பொறிமுறையைப் பின்பற்றுவதற்காக தற்போதுள்ள லயன் அறைகளை அகற்றி குறித்த இடத்திலேயே புதிய வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் ஆபத்துக்கள் இருப்பின், மற்றும் லயன்; அறைகள் அமைந்திருக்கும் இடங்களில் இடவசதிகள் போதுமானளவு இல்லாவிட்டால் வேறு இடங்களில் வீடுகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த வீடுகளை இருமாடி வீடுகளாக நிர்மாணிக்கக் கூடிய வகையில் 550 சதுர அடிகளைக் கொண்ட வீட்டின் முதலாம் கட்டத்திற்காக 1 தசம் 3 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

அத்துடன் கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டத்திற்காக மேலதிகமாக 03 பேர்ச்சர்ஸ் காணி, ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் வழங்கப்படவுள்ளதுடன் வீடமைப்பிற்கான பெறுமதியின் 50 சதவீதத்தை பயனாளிகளிடமிருந்து மீள அறவிடுவதோடு, அதற்காக 20 வருடகாலம் வழங்கப்படவுள்ளது. மேலும் லயன் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வரைக்கும் வேறு இடத்தில் தற்காலிகமாக வசிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: