பெருந்தெருக்கள் பராமரிப்புக்கு எரிபொருள் ஊடாக வரி விதிப்பு! – அமைச்சரவைக்கு யோசனை முன்வைப்பு!

Tuesday, January 15th, 2019

நாட்டின் பெருந்தெருக்களின் பராமரிப்புக்கான நிதியத்தை ஆரம்பித்து அதற்கான நிதியை வாகனங்களுக்கு நிரப்பப்படும் எரிபொருள்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வகையிலான திட்டவரைவை பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சு அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது.

வாகனங்களுக்கு நிரப்பப்படும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரு லீற்றருக்கு 50 சதம் வரி அறவிடுவதற்கு அந்தத் திட்ட வரைவில் முன்மொழியப்பட்டுள்ளது. வீதி முகாமைத்துவ நிதியத்தை அமைத்து வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளுர் அதிகார சபைகளுக்கு உள்பட்ட வீதிகளை பராமரிப்புக்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்வதற்கு இந்தத் திட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட வீதிகளைப் பராமரிப்பதற்கு ஆண்டுதோறும் 300 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. வீதி அபிவிருத்திகளுக்கு செலவிடப்படும் நிதியில் இந்த ஒதுக்கீடு அரைவாசியாகும். ஆண்டிறுதியில் ஏனைய அமைச்சுக்களிடம் நிதி கோரப்படுகின்றது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திட்டவரைவுக்கு அமைச்சரவை அனுமதியளித்து செயற்படுத்தப்பட்டால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆண்டுக்கு 50 பில்லியன் ரூபா நிதி கிடைக்கும். அந்த நிதி வீதிகளின் பராமரிப்புக்கு பயன்படுத்த முடியும். பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சும் பெற்றோலிய வளங்கள் அமைச்சும் முன்னர் வெவ்வேறாக இருந்தன.  அதனால் இந்த திட்டவரைவுக்கு அனுமதியைப் பெறுவதில் தாமதங்கள் இருந்தன. தற்போதைய அமைச்சரவையில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சு ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: