பெண்களின் வாழ்வாதாரம் மேலும் உயர வேண்டும் – பெண்களது நிகழ்வில் யாழ். மாநகர முன்னாள் பிரதி முதல்வர் றீகன்!

Sunday, March 12th, 2017

நாம் மக்களின் உரிமைக்காக மட்டுமன்றி பெண்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காகவுமே தொடர்ந்தும் உழைத்து வருகின்றோமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண நகரப் பகுதி நிர்வாகச் செயலாளரும், மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான துரைராஜா இளங்கோ (றீகன்) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், செழியன்வீதி, அம்மன்கோவிலடி மாதர் சங்கத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர்தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் இப்பகுதி மக்களுடனேயே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றேன். எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்புரையை ஏற்று இப்பகுதி மக்களின் கஷ்டங்கள் துன்பங்களை துடைப்பதற்காகவே என்றும் சேவை புரிந்து வருகின்றேன்.
மழை பொழிந்தால் என்ன? வெள்ளம் ஓடினால் என்ன? அந்த அனர்த்தங்களின் போது ஓடிச்சென்று இந்தக் கிராமத்தை பார்வையிடுமாறு எனக்கு எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறுவதுண்டு. அவரது விருப்பங்களை ஏற்று அவர் கூறாமலேயே இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முதற்கொண்டு வீதி புனரமைப்பு மற்றும் மக்கள் பணிகளுக்காகத் தொடர்ந்தும் இப்பகுதியிலேயே நான் இருந்து வருகின்றேன்.
இன்று அரசியல் பலத்தோடு இருப்பவர்கள் இப்பகுதி மக்களுக்கு எதையும் செய்யவில்லை. நாம் குறைந்த அரசியல் பலத்தோடு இருந்தாலும் பலவற்றை இந்த மக்களுக்காகச் செய்திருக்கின்றோம். இப்போது எமக்கு அரசியல் அதிகாரம் இல்லை. எதிர்காலத்தில் மக்கள் எமது தலைவரின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். எமது கட்சியை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். அதனூடாக இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை நாம் தூக்கி நிறுத்துவோம்.
இன்று மகளிர்தினம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெண்களின் உரிமைக்காக நீங்கள் இங்கே கூடியிருக்கின்றீர்கள். நாம் பெண்களின் வாழ்வாதாரத்திற்காக பல பாரிய பணிகளை ஆற்றியிருக்கின்றோம். மீண்டும் அரசியல் பலம் எமக்குக் கிடைத்தால் தொடர்ந்தும் எமது பணிகளை நாங்கள் ஆற்றுவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

Related posts: