பூஸ்டர் தடுப்பூசியின் செயற்றிறன் எதிர்பார்க்கும் மட்டத்தை அடையும் பட்சத்தில், முகக்கவசம் அணிவதை தவிர்ப்பதற்கு எதிர்பார்ப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, February 20th, 2022

பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் பின்னர் நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் நோயெதிர்ப்பு திறன், எதிர்பார்க்கும் மட்டத்தை அடையும்பட்சத்தில், முகக்கவசம் அணிவதை தவிர்ப்பதற்கும், விழாக்களை நடத்துவதற்கும் அனுமதித்து நாட்டை முழுமையாக திறப்பதற்கு தயாராக உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று மேலும் 1,273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 35 ஆயிரத்து 606 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் நேற்று மேலும் 20 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கொரோனா அவசர சிகிச்சை மையங்களின் வசதிகளை மேம்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதையடுத்து, அவசர சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்துள்ளது என்று அவசர சிகிச்சைகளுக்கான விசேட வைத்தியர்களின் நிறுவகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: