பூர்வீக நிலங்களை மீளப் பெறுவது தொடர்பில் பேசப்படவில்லை! – வடமராட்சி மக்கள் ஏமாற்றம்!

மக்களது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான ஆராய்வுகள் எதுவும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் கடந்த 23.05.2016ல் வடமராட்சி கிழக்கிலும் (மருதங்கேணி), 04.06.2016 காலையில் வடமராட்சி தெற்கு மேற்கிலும் (கரவெட்டி) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் வடமராட்சி வடக்கிலும் (பருத்தித்துறை) இடம்பெற்றன.
இதில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி (கூட்டமைப்பு) ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட இணைத் தலைவர்கள் முன்னிலையில் இடம்பெற்றிருந்தன. இதில் மக்களது நிலங்களை மீளப் பெறுவது தொடர்பாக நிகழ்ச்சி நிரலில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
கடந்த ஆட்சிக் காலத்தில் மக்களது நிலங்களில் படையினர் தளங்கள் அமைத்துள்ளனர் என்றும் விவசாய நிலங்கள் அதேபோன்று குடியிருப்புப் பகுதியில் முகாம்கள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர் என்றும் உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டும் என பல்வேறு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கூட்டமைப்பினர் கூறிவந்தனர். அதற்கு முப்படைகளுக்குப் பொறுப்பான ஜனாதிபதியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் வந்தனர். ஊடகங்களும் அதற்கு முன்னுரிமை கொடுத்து வந்தன.
ஆனால் 2015 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் குறிப்பாக வடமராட்சிப் பகுதியில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் சுண்டிக்குளம், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி கடற்படைமுகாம், உணவத்தை, செம்பியன்பற்று, நாகர்கோவில் உட்பட சுமார் 800 ஏக்கர் நிலங்கள் படையினர் வசம் உள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் வல்வெட்டித்துறை தென்மேற்கு பிரிவில் 10 வீடுகளும் ஒரு வியாபார நிலையமும் வல்வெட்டித்துறை தென்கிழக்கு பிரிவில் 04 வீடுகளும் 05 வியாபார நிலையமும் அல்வாய் வடக்கு பகுதியில் 31 பேருக்குச் சொந்தமான 5.15 ஏக்கர் காணியும் பருத்தித்துறையில் 02 பேருக்குச் சொந்தமான வீடு அமைந்துள்ள 2.347 ஏக்கர் நிலமும் விடுவிக்கப்படவில்லை.
கரவெட்டி பிரதேசசெயலர் பிரிவில் இமையாணன் பிரிவில் எல்லாங்குளம் இராணுவ முகாம் அமைந்துள்ள மக்களது காணிகள் சுமார் 0.01505 சதுர நிலமும் அத்துடன் அரச காணியில் 0.00494 சதுர நிலமும் கரணவாய் மேற்கில் வல்லை இராணுவ முகாமிற்கு 0.03956 சதுர நிலமும் படையினர் வசம் உள்ளது. இவற்றை விடுவிக்க வேண்டும் என கடந்த கூட்டங்களில் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களோ அல்லது கூட்டமைப்பு எம்பிக்களோ எதுவும் பேசவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் தேர்தல் கூட்டங்களிலும் கூச்சலிட்டவர்கள் தற்போது அரசில் அங்கம் வகிப்பதால் மௌனம் சாதித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர் என சலசலப்புடன் மக்கள் பேசிக் கொண்டதை கேட்கக் கூடியதாக இருந்தது.
மண்டைதீவில் மூடிய கிணற்றுக்குள் மண்டையோடு இருப்பதாகவும் தான் உடனடியாகத் தோண்டப் போவதாகவும் ஊடகங்களுக்கு அதிர்ச்சி அறிக்கை விடுத்த அம்மையாரும் கூட்டத்தை முடிப்பதிலேயே அவசரமாக இருந்தாரே தவிர மக்களின் நிலம் தொடர்பாக எதவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|