புளொட் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்!

துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புளொட்டின் முன்னாள் உறுப்பினரை எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறுயாழ்.நீதிவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவிட்டது.
சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தினர். குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக முதல் அறிக்கையை பொலிஸார் தாக்கல்செய்தனர்.
அடாவடியாக யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் குடியிருப்பவரை வெளியேற்றுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் எழுத்தாணைக் கட்டளைவழங்கியிருந்தது.
யாழ்ப்பாணம் பொலிஸார் அதனை நிறைவேற்ற மாவட்ட நீதிமன்றில் பதிவாளருடன் அந்த வீட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கிருந்த தளபாடங்கள் வெளியேற்றப்பட்டன.
இதன்போது அலுமாரி ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏகே47 துப்பாக்கி ஒன்று அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர்கள் 2 ரவைகள் 396 கைத்துப்பாக்கி ஒன்றுஅதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3 வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன. அந்த வீட்டில் அடாவடியாக குடியிருந்த மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 55) என்ற நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆயுதங்கள் நான் இருந்த வீட்டின் அலுமாரியில்தான் இருந்தன. எனினும் அவை தொடர்பாக எனக்கு எதுவுமே தெரியாது என சந்தேகநபர் மன்றில்தெரிவித்தார்.
விசாரணைகளை முன்னெடுத்த யாழ்.நீதிமன்றப் பதில் நீதிவான் க.அரியநாயகம் சந்தேகநபரை வரும் ஜனவரி 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறுஉத்தரவிட்டார்
Related posts:
|
|