புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச்செய்ய ஜனாதிபதி இணக்கம்!

Thursday, February 21st, 2019

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய நிதியமொன்றை தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சிறுவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விசேட சமூக ஆய்வறிக்கைகளை பெற்று, சிறுவர்களுக்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் பலமாகவும் துரிதமாகவும் முன்னெடுப்பதற்கு இதன் மூலம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுக்கின்ற போது பெற்றோர்களுக்கு அது பற்றி அறிவூட்ட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இதனை இரத்துச்செய்வது பற்றிய தீர்மானத்திற்கு தானும் உடன்படுவதாக தெரிவித்தார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை சிறுவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான முக்கியமானதொரு தடை தாண்டல் அல்ல என்றும் இதன்போது பிள்ளைகளுக்கு ஏற்படும் உளவியல் அழுத்தங்கள் பற்றி அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் உள்ள அதேநேரம், நாட்டின் சிறுவர் தலைமுறைக்கு அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு தான் பொறுப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts:


உதவிக்கரம் நீட்டியது ஈ.பி.டி.பி : நல்லூர் பிரதேச சபையையும் வென்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!
உள்நாட்டில் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்கா...
உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் இன்றுமுதல் வழங்கப்படும் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவி...