புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படுகின்ற பேரீச்சம் பழங்களுக்குரிய வரியை முற்றாக அகற்ற நடவடிக்கை எடுக்க முடியுமா?

Friday, July 8th, 2016

புனித றமழான் மாதத்தில் இலங்கை வாழ் எமது சகோதர மக்களாகிய முஸ்லிம் மக்களுக்கு இலவசமாக வழங்கும் முகமாக உலக இஸ்லாமிய நாடுகளால் வருடந்தோறும் பேரீச்சம் பழங்கள் இலவசமாக எமது நாட்டுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படுகின்ற பேரீச்சம் பழங்களுக்கு அறவிடப்படுகின்ற வரியை முற்றாக அகற்ற நடவடிக்கை எடுக்க முடியுமா? என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் இதற்கான பதிலை வழங்குவார் என எதிர்பார்க்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்த தெரிவிக்கையில் –

இதன் பிரகாரம் டுபாய், ஈரான் உட்பட்ட நாடுகள் வருடந்தோறும் தொடர்ச்சியாக பேரீச்சம் பழங்களை வழங்காதவிடத்தும், வழங்கும் சந்தர்ப்பங்களில் அதற்கான இறக்குமதி வரியை அந்தந்த நாடுகளே ஏற்றுக் கொள்வதாகத் தெரியவருகிறது.

இந்த நிலையில் வருடந்தோறும் தொடர்ச்சியாக எமது நாட்டுக்கு சுமார் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களை சவூதி அரேபியா வழங்கி வருவதாகத் தெரிய வருவதுடன், இதற்கான இறக்குமதி வரியை இலங்கை முஸ்லிம் கலாசார அலுவல்கள் திணைக்களமே செலுத்தி வருவதாகத் தெரிய வருகிறது.

அந்த வகையில், இந்த வருடம் இறக்குமதி செய்யப்பட்ட 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களுக்கென மேற்படி திணைக்களம் சுமார் 16 மில்லியன் ரூபாவை செலவிட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

இலவசமாகக் கிடைக்கின்ற பேரீச்சம் பழங்களுக்கு வருடந்தோறும் மேற்படி திணைக்களம் இவ்வாறானதொரு தொகையை செலவிட்டு வருவதைத் தவிர்த்தால், அந்த நிதியைக் கொண்டு அத் திணைக்களத்தினால் முஸ்லிம் மக்கள் நலன் சார்ந்த வேறு பயன்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

சவூதி அரேபியாவின் மூலம் எமது நாட்டுக்கு புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படுகின்ற பேரீச்சம் பழங்களுக்கு அறவிடப்படுகின்ற வரியை முற்றாக அகற்ற நடவடிக்கை எடுக்க முடியுமா?

அல்லது சவூதி அரேபியா தவிர்ந்த ஏனைய நாடுகள் இறக்குமதிக்கான வரியை தாமே ஏற்றுக் கொள்வது போன்ற ஒரு நடைமுறையை சவூமி அரேபியா தொடர்பிலும் ஏற்படுத்திக் கொள்வதற்கு ஏதேனும் சாத்தியப்பாடுகள் உள்ளனவா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related posts: