புத்தூரில் வயோதிபப் பெண் உயிரிழப்பு: மழையில் நனைந்த வெங்காயம் உலர்த்தும் போது வீபரீதம்
Monday, November 6th, 2017யாழ். புத்தூரில் அடைமழையினால் நனைந்த வெங்காயப் பிடிகளை உழவியந்திரத்தில் பொருத்திய காற்றாடியில் உலர்த்திய போது அதனுள் சிக்குண்டு வயோதிபப் பெண்மணியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(10) மாலை யாழ். புத்தூரில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வந்த அடைமழையினால் விவசாய நிலத்தில் விளைந்து வீட்டில் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த வெங்காயப் பிடிகள் நனைந்தன. இந்த வெங்காயப் பிடிகளை உலர்த்துவதற்காக அவரது உறவினர்கள் உழவியந்திரத்தினை இயக்கி அதன் ஊடாகக் காற்றாடியினை இணைத்து வெங்காயத்தினை உலர வைத்துள்ளனர்.
இச் சந்தர்ப்பத்தில் குறித்த வயோதிபப் பெண்மணி உடைகளை உலர்த்துவதற்காக காற்றாடிக்கு அருகில் ஈரமான உடைகளை எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது காற்றாடியிலிருந்து வெளிப்பட்ட காற்று மேற்படி பெண்மணி அணிந்திருந்த சேலை காற்றாடியின் சக்கரத்தில் சிக்குண்டது. இதனால், காற்றாடியின் பிளேட்டுக்குள் சிக்குண்ட நிலையில் அவரது உடலில் கடும் வெட்டுக் காயங்கள் உண்டானது.
உறவினர்கள் அவரை மீட்டு அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து அம்புலன்சில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அங்கு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.
யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் இன்று பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
மட்டக்களப்பில் தமிழர் பண்பாட்டின் பொங்கல் விழா 2017 - ஈ.பி.டி.பியின் ஜேர்மன் அமைப்பாளர் மாட்டின் ஜெய...
இலங்கையில் பல்வேறு சமூகத்தினர் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு நேரடி காரணம் வெளிநாட்டு சக்திக...
மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் தொடர்பில் கருத்துரைப்பதில...
|
|