புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க  ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் !

Sunday, December 16th, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். இதனையடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்தையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், குறித்த மனுக்கள் ஏழு பேரை கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

தொடர்ந்து நாடாளுமன்றம் கலைப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததுடன், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணையின் பிரகாரம்  நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மேற்கொண்டிருந்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என கடந்த 13ஆம் திகதி தீர்ப்பு வெளியாகியிருந்தது.

தொடர்ந்து பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சரவைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவும் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நீடிக்கப்பட்டது.

இதனையடுத்து மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக நீடித்த அரசியல் குழப்பங்களுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Related posts: