புதிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி – ஒரு இலட்சம் ரூபா வரை அபராத தொகை அதிகரிக்கும் என சுற்றாடல் அமைச்சு தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021

புதிய சுற்றாடல் சட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள  சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அதனடிப்படையில் சுற்றாடல் சட்டங்களை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, புதிய சட்ட திருத்தத்தினூடாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமுலிள்ள 5,ஆயிரம் ரூபா அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

சுற்றாடல்சார் செயற்பாடுகளுக்காக அனுமதி பெற்ற போதிலும், காலாவதியான அனுமதிப்பத்திரங்களுடன் செயற்படுவோர் அடையாளம் காணப்பட்டால், அனுமதிப்பத்திரம் காலாவதியாகிய திகதிமுதல் அமுலாகும் வகையில் அபராதத்தை அறவிடவும் புதிய சட்ட திருத்தத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை சதுப்பு நிலம் என்ற பதத்திற்கு காணப்பட்ட குறைபாடு, புதிய சட்ட திருத்தத்தினூடாக மறுசீரமைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இரசாயன பயன்பாடு தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் புதிய சட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள புதிய சட்ட திருத்தத்தை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய சுற்றாடல் கொள்கை மற்றும் சுற்றாடல்சார் செயற்பாடுகளின் திட்டங்கள் ஆகியனவற்றையும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: