புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
திரு.சஞ்சய ராஜரத்னம் நாட்டின் 48 ஆவது சட்ட மா அதிபராவார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 34 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள.ராஜரத்னம், அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல், சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.
கொழும்பு புனித பீட்டர் கல்லூரி, ரோயல் கல்லூரிகளில் கல்விகற்றுள்ள அவர், லண்டனில் உள்ள குயின்மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்..ராஜரத்னம் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சொலிஸிட்டராவார்.
2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார். சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்துறை குறித்து விரிவான அனுபவத்தை பெற்றுள்ள அவர், நீண்டகாலமாக உயர் நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட சில அரசாங்க நிறுவனங்களில் ஆலோசகர் பதவியை வகித்துள்ள அவர், இலங்கை சட்ட ஆணைக்குழு, சட்டக் கல்விப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினரென்பதும் குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|