புதிய அரசியல் யாப்பிற்கு 5,000க்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவு!
Sunday, March 27th, 2016நாட்டில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பாக இதுவரை 5000 க்கும் மேற்பட்ட மக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கருத்துக்களை பதிவு செய்யும் விசேட குழு தெரிவித்துள்ளது.
அரசினால் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் தலைவர் வழக்கறிஞர் லால் விஜேநாயக்க இதனை தெரிவித்தார். நாடு முழுவதும் சென்று மக்களின் கருத்துக்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கை தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறிய லால் விஜேநாயக்க தற்போது அரசியல் தலைவர்கள், மத குருமார்கள் உட்பட சிவில் அமைப்புகளின் கருத்துக்களை பெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இதன்படி புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர், எதிர் கட்சித் தலைவர் ஆகியோரின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர் இரண்டு மாகாண முதலமைச்சர்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பௌத்த, இந்து, கத்தோலிக்க, முஸ்லிம் மதகுருமார்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய வழக்கறிஞர் விஜேநாயக்க இதுவரை புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக 5000 க்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துக்களை தெரிவித்த அவர் மக்கள் கருத்துக்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் புதிய அரசியல் யாப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது குறித்து மக்கள் கருத்துகள் அடங்கிய இறுதி அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுமென்றும் அவர் கூறினார்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பாக பேசும்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டுமென்ற கருத்து பிரதானமாக முன்வைக்கப்பட்டுவருகிறது. சிலர் ஜனாதிபதி முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளதாக தெரிவித்த லால் விஜேநாயக்க இன்னும் சிலர் ஜனாதிபதி பதவியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டு அதனை நாடாளுமன்றத்திற்கு வழங்க வேண்டுமென்ற யோசனையை முன்வைத்துள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|