புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, June 22nd, 2017

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த. குரு குலராஜா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள நிலையில் புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக மாகாணசபை உறுப்பினர்கள் சிலரிடம் சுயவிபரக் கோவையை வழங்குமாறு கேட்டு வடமாகாண முதலமைச்சர் புதன்கிழமை(21) கடிதம் அனுப்பியுள்ளார்.

வடமாகாண அமைச்சர்களுக்கெதிரான குற்றச்சாட்டையடுத்து வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வியமைச்சர் ஆகியோர் தங்கள் பதவிகளைத் தியாகம் செய்ய வேண்டுமென வடமாகாண முதலமைச்சரால் கேட்டுக் கொண்டதற்கமைய குறித்த இருவரும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்தனர்.

இந்த நிலையில் குறித்த அமைச்சர்களின் பதவிகளைத் தற்காலிகமாக வடமாகாண முதலமைச்சர் இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். இதற்கமைய புதிய அமைச்சர்களைத் தெரிவு செய்வதற்காக வடமாகாண முதலமைச்சர் இன்று மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் உங்கள் சுயவிபர கோவைகளை நாளை வியாழக்கிழமை மதியத்திற்குள் சமர்ப்பிக்கும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. முதலமைச்சரின் இந்தச் செயற்பாடானது புதிய அமைச்சர்கள் தெரிவுக்கானது எனவே கூறப்படுகின்றது.