புதிய அமைச்சரவை தொடர்பில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை – சில தினங்களுக்குள் ஜனாதிபதி தலைமையில் ஆளுந்தரப்பின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் தகவல்!

Saturday, April 16th, 2022

புதிய அமைச்சரவை தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேநேரம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, அனைத்து முன்னாள் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை நியமியக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இதன்போது தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் எனவும் குறித்த முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதிய அமைச்சரவையில் இளையவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் அமைச்சரவையில் நான்கு சிரேஸ்ட அமைச்சர்கள் மட்டுமே அங்கம் வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நான்கு அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள், ஆளுந்தரப்பின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தலைமையில் இந்தக் கூட்டமும் இடம்பெறவுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, சர்வதேச நாணய நிதித்துடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல் என்பன தொடர்பில், இதன்போது முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஆளுந்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.

எவ்வாறிருப்பினும், இந்தக் கூட்டம் இடம்பெறும் திகதி மற்றும் இடம் என்பன குறித்து இதுவரையில், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஒரு போதும் தாம் பதவிவிலகப்போவதில்லை என பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் அரசமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே தான் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம்  புதிய அமைச்சரவை எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்ய உள்ளதென அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. 

000

Related posts: