புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும்!

ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் சத்தியபிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியபிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய அமைச்சரவைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சரவை நியமனம் குறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திபு இடம்பெற்றுள்ளதுடன் ரஞ்சித் மத்தும பண்டார ராஜித சேனாரட்ன நவீன் திஸாநாயக்க முதலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அமைச்சரவை நியமனம் தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சரத் பொன்சேகா உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்றைய தினம் அமைச்சுப் பதவி வழங்கப்படமாட்டாது என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டார, மஹிந்த ராஜபக்ஷ தமது வேதனப் பணத்தில் கடந்த மாதம்கூட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிதியத்துக்காக 3 ஆயிரம் ரூபாவை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை ஒருபோதும் கைவிடமாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|