புங்குடுதீவுப் பெண்ணுடன் பேருந்தில் பயணித்தோர் அச்சமின்றி விபரங்களை தாருங்கள் – யாழ்.அரச அதிபர் அவசர கோரிக்கை

Thursday, October 8th, 2020

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் இருப்பதற்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள மாவட்ட அரச அதிபர் மகேசன், கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட புங்குடுதீவுப் பெண் பயணித்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் அச்சமின்றி தமது விவரங்களை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

யாழ். மாவட்டத்தில் புங்குடுதீவு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய யுவதி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் கடந்த 3 ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து 4 ஆம் திகதி அதிகாலை புங்குடுதீவைச் சென்றடையும் வரை பயணித்த பேருந்துகளின் இலக்கங்களும் குறிப்பிட்ட தரிப்பு நிலையத்தில் இருந்து அவை புறப்பட்ட நேரமும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் ஏற்கனவே அறியத்தரப்பட்டுள்ளது.

எனவே குறிப்பிட்ட பேருந்துகளில் 3ஆம், 4ஆம் திகதிகளில் இவருடன் பயணித்த வர்கள் தமது விபரங்களை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் 24 மணி நேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கோரியுள்ளார்.

அத்துடன் பயணம் செய்தவர்களின் விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்குக் கொரோனாத் தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களயும் அயலவர்களையும் கொரோனாத் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்’ என தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: