புகையிலை நிறுவனங்கள் வழங்கும் ஒரு சதத்தையேனும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது -ஜனாதிபதி!

Tuesday, December 6th, 2016

புகையிலை கம்பனிகள் மூலம் வழங்கப்படும் ஒரு சதத்தையேனும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளமாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பௌதீக ரீதியாக எவ்வளவு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்ட போதும் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிப்பது நாட்டு மக்களின் சிறந்த சுகாதார நிலைமைகளாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கை மக்களை ஆரோக்கியமான சமூகமாகக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் புகையிலை மற்றும் மதுசாரத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பின்பற்றும் இறுக்கமான நடைமுறைகள் இன்று ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார தாபனம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேல் நாட்டு மருத்துவத்தைப் போன்றே எமது பாராம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் உட்பட சுதேச மருத்துவத் துறையும் இன்று உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு துறையாக வளர்ச்சியடைந்திருப்பதுடன், இத்துறையின் வளர்ச்சிக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மருத்துவர்களும் தாதிமாரும் நாட்டை விட்டும் புலம்பெயர்வது இன்று சுகாதாரத் துறையில் பாரிய பிரச்சினையாகவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதை முடியுமானளவு குறைத்துக்கொள்ளுமாறு அனைத்து வைத்திய நிபுனர்களிடமும் தாதிமாரிடமும் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டை விட்டும் வெளியே வசிக்கும் அனைத்து மருத்துவர்களும் தாதிமாரும் மீண்டும் தாய்நாட்டுக்கு வந்து சிறிது காலமேனும் தாய்நாட்டுக்காக சேவைசெய்யவேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டை விட்டுச் சென்றுள்ள வைத்திய நிபுணர்களும் தாதிமாறும் மீண்டும் தாய்நாட்டுக்கு வந்து தமது சேவையை வழங்க முன்வருவார்களானால் அவர்களுக்கான பொறுப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் மேலும் ஜனாதிபதி தெரிவித்தார்.

President-Maithripala-Sirisena-Writes-to-Mahinda-Rajapaksa-Prime-Minister-should-be-handed-over-to-a-senior-member-of-the-Sri-Lanka-Freedom-Party-who-has-not-yet-been-granted-this-opportunity. (1)

Related posts: