புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவிப்பு!

Wednesday, December 7th, 2022

புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது என்று போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைகள் வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புகையிரத சேவையை நட்டம் ஏற்படாதவகையில் எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் புகையிரத ஊழியர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. அத்துடன், திணைக்களம் என்ற ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்வதில் உள்ள சிரமங்களினால் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன. எனவே புகையிரத அதிகாரசபை சபை உருவாக்கப்பட்டு புகையிரத சேவை மீண்டும் சீர் செய்யப்படும். இதனூடாக நிருவாகமும் சீர் செய்யப்படும். தற்போது இதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

கடந்த காலங்களில் புகையிரத திணைக்களத்திற்கு வருடாந்தம் 10 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது. கடந்த வருடத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, எரிபொருளுக்கான செலவை ஈடுசெய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், புகையிரத திணைக்களத்திற்கு மாதாந்தம் 300 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

புகையிரத திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், அண்மையில் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதனால், தற்போது மாதாந்தம் சுமார் ஒரு பில்லியன் வருமானம் கிடைக்கின்றது. ஆனால் இந்த வருமானம் புகையிரதங்களுக்கான எரிபொருளுக்கே பயன்படுத்தப்படுகின்றது.

எனவே, உயர் முகாமைத்துவ நுட்பங்களை பின்பற்றி எதிர்காலத்தில் இந்த வருமானத்தை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: