புகையிரத கடவை காவலர்கள் வேலைநிறுத்தம்!

Sunday, April 2nd, 2017

பாதுகாப்பற்ற புகையிரத வாயில்களின் காவலாளிகள், தங்களது சேவைக்கு மேலதிகமான நாட்களில் கடமைப்புரிவதற்கான கட்டணங்களை பெற்றுக்கொள்வதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் 31ஆம் திகதியன்று, அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, பாதுகாப்பற்ற புகையிரத வாயில்களின் காவலர்களுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத வாயில் பாதுகாவலர்களுக்கு தினசரி ஊதியம் என்ற அடிப்படையிலேயே சம்பளம் வழங்கப்படுவதாகவும் ஆனால், மாதத்தின் இறுதிநாளைக்கான ஊதியத்தை வழங்குவதற்கு, புகையிரத திணைக்களம் தவறிவிடுவதாகவும், சங்கத்தின் தலைவர் ஜே.ஏ.சீ. பிரேமலால் தெரிவித்துள்ளார். 31ஆம் திகதியை, வேலை நாளாக அவர்கள் கணக்கிடுவது இல்லை என்றும் எந்தவொரு கட்டணங்கள் இல்லாமல், அன்றைய தினத்துக்கு இலவசமாகவே வேலைபார்த்துக்கொடுப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே, ஒவ்வொரு மாதமும் 31ஆம் திகதியன்று, காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப்பகுதிக்குள், அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் கூறினார். நாடளாவிய ரீதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத வாயில்களுக்கென்று, 2,061 பாதுகாவலாளிகள் பணியாற்றுவதாகவும் அனைவரும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து, அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவர் என்றும் அவர் மேலும் கூறினார். வாயில் பாதுகாவலாளிகளுக்கு, ஒரு நாளைக்கு 250 ரூபாய் மாத்திரமே செலுத்தப்படுகின்றது.

Related posts: