புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு – சகல பிரச்சினைகளுக்கும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு – போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, February 25th, 2022

புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கைப் புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமான இரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலையை கண்காணித்ததன் பின்னர் ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்தள்ளார்

அத்துடன் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகள் மற்றும் வள முகாமைத்துவம் உட்பட தற்போதுள்ள சகல பிரச்சினைகளுக்கும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு காணுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இயந்திரப் பொறியியல் அலுவலகம் மற்றும் தொழிற்சாலை வளாகங்கள் 1933இல் நிறுவப்பட்டதன. இது, புகையிரத என்ஜின்கள், புகைவண்டிகள் மற்றும் வேன்கள் உள்ளிட்ட இயந்திரங்களைப் பழுதுபார்த்து பராமரிப்பதன் மூலம், வழக்கமான புகையிரதச் சேவையை பராமரிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது.

இத்தொழிற்சாலையானது, 04 பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், 32 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இரத்மலானையில் உள்ள 30 தொழிற்சாலைகளிலும் கொழும்பில் 06 தொழிற்சாலைகளிலும் பிரதம இயந்திர பொறியியலாளர் உட்பட 24 அங்கத்தவர்களும், 2,301 தொழிநுட்ப மற்றும் தொழிநுட்பமற்ற பணியாளர்களும் பணிபுரிகின்றனர்.

ஜப்பான், தென் கொரியா, சீனா, இந்தியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 142 என்ஜின்கள், 129 பவர் செட்கள் மற்றும் 1,110 பெட்டிகள், இலங்கைப் புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமானது.

வருடமொன்றுக்கு சுமார் 110 புகைவண்டிகள் பழுதுபார்ப்பதற்காக இரத்மலானை தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன. தற்போதுள்ள ஊழியர்களின் பிரச்சினைகளால் சுமார் 70 கேபின்கள் பழுதுபார்க்கப்படலாம் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக அந்த எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் நிலவும் பிரச்சினைகளை நீக்கி இலங்கை – ஜேர்மன் புகையிரத தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முறைமை உருவாக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேநேரம் புகையிரதத் திருத்தத்தின் போது அடையாளம் காணப்பட்ட தேவைகள் தொடர்பில் முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு பிரதம பொறியியலாளர் கீர்த்தி ஹேவாவிதானவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தொழிற்சாலை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் கொட்டப்பட்டிருந்த சுமார் 6,700 தொன் பயன்படுத்தப்படாத கழிவுப் பொருட்கள் அழுகிக் கொண்டிருந்தன. அவற்றை உடனடியாக ஏலம் விடவும் இதன் மூலம் கிடைக்கும் சுமார் 600 மில்லியன் ரூபாவை புகையிரதத் திணைக்களம் மற்றும் ஊழியர்களின் நலனுக்காகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

தொழிற்சாலையின் 80 சதவீத தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர், அவர்களில் பலர் தொழிலாளர்களாக வேலைக்கு வந்து, அதே தரத்தில் ஓய்வு பெறுகிறார்கள் என்று, ஜனாதிபதி அவர்களிடம் தொழிலாளர்கள் தெரிவித்தனர். தொழிலாளர்களாக சேவையில் இணைபவர்களுக்கு, அவர்களின் பணி அனுபவம் மற்றும் பயிற்சியைக் கருத்திற்கொண்டு பதவி உயர்வு நடைமுறையை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: